ஆன்மிகம்

மது பழக்கத்தை மாற்றும் பரிகார தலம்

Published On 2019-02-22 07:34 GMT   |   Update On 2019-02-22 07:34 GMT
மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருவரது மது குடிக்கும் பழக்கம் அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் அனைத்து வகையிலும் பாதிக்க செய்து விடும். தொடர்ந்து மது குடிப்பவர்கள் கடைசியில் அதற்கு அடிமையாகி உடல் நலம், மன நலம், வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வைத்து விடுகிறது.

ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் இப்படி மதுவுக்கு அடிமையாகி அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.

ராகு,கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது.

மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

எனவே மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நம்பிக்கைதான் முக்கியம் என்றும் சொல்கிறார்கள்.

தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு முறை இந்தத் திருத்தலத்திற்கு சென்று வரலாமே. நம்பிக்கையோடு சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.
Tags:    

Similar News