ஆன்மிகம்

நவகிரக தோஷங்கள் நீக்கும் ஆறகழூர் அஷ்டபைரவர் ஆலயம்

Published On 2018-08-28 07:43 GMT   |   Update On 2018-08-28 07:43 GMT
சேலம் வசிஷ்ட நதிக்கரை சிவாலயத்தில் உள்ள அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான். தனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார்.

நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்டபைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.

Tags:    

Similar News