உள்ளூர் செய்திகள்
இரு தங்கத்தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத்தேர் பவனி

Published On 2021-12-20 08:32 IST   |   Update On 2021-12-20 08:32:00 IST
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9-ம் நாள் திருவிழாவான 18-ம் தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடந்தது. 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது

10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்கும் மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தையர்கள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News