உள்ளூர் செய்திகள்
புனித அமல அன்னை

புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2021-12-05 08:00 IST   |   Update On 2021-12-04 10:22:00 IST
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றி, அமல அன்னை திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.

தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.

10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.

12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.

இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் போதிய இடைவெளி கடைபிடிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாலையில் தேர் ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 12-ந் தேதி 3 திருப்பலிகளின்போதும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.

Similar News