உள்ளூர் செய்திகள்
சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவையொட்டி நேற்று தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழா தேர் பவனி

Published On 2021-12-04 09:44 IST   |   Update On 2021-12-04 09:44:00 IST
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று தேர் பவனி நடந்தது. நல்ல மிளகு, உப்பை பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. 8-ம் திருவிழாவான 1-ந் தேதி இரவு தேர் பவனி நடந்தது. அன்றைய தினம் 3 தேர்கள் பவனியாக வந்தன.

9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன. இந்த 2 நாட்களும் கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்குள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவதும் நடைபெறவில்லை.

சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. பின்னர் 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. கடந்த 2 நாட்களாக ஆலயத்துக்குள்ளே மட்டும் வலம் வந்த தேர்கள் நேற்று வீதியில் வலம் வந்தன.

அதாவது பேராலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.

இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சவேரியார் பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு கை கழுவும் திரவங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மிட்டாய் கடைகளும் போடப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News