ஆன்மிகம்

தூயமிக்கேல் அதிதூதர் புதிய ஆலய அபிஷேக விழா இன்று நடக்கிறது

Published On 2016-12-09 10:16 IST   |   Update On 2016-12-09 10:16:00 IST
கோவை பெரியகடை வீதியில் தூய மிக்கேல் அதிதூதர் புதிய ஆலய அபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) பேராயர்கள் தலைமையில் நடக்கிறது.
கோவை பெரியகடை வீதியில் கடந்த 1867-ம் ஆண்டில் கட்டப்பட்ட (149 ஆண்டுகள் பழமையான) தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் இருந்தது. கோவை கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட பேராலயமான இந்த ஆலயம் மிகவும் பழமையானதால் அதை புதுப்பித்து, புதுமையாக வடிவமைத்து கட்டும் பணி கடந்த 3½ ஆண்டுகளாக நடைபெற்றது.

புதிய ஆலயம் ரோம்நகரில் உள்ள புனிதபீட்டர் தேவாலய தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆலயப்பணிகள் முழுமையாக முடிவடைந்து, அழகிய முகப்பு வாயிலுடன் அனைவரையும் வரவேற்கிறது. இந்த புதிய ஆலயத்தின் அபிஷேக விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடந்து வந்தது. இந்த ஆலய அபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பவனி, 5 மணிக்கு பேராலய முகப்பு வாயில் வளைவு மற்றும் கொடிக்கம்பம் புனிதப்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிக்கு பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மறைமாவட்ட பேராயர் பிரகாஷ் மல்லவரம்பு கொடியேற்றி வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு புதிய பேராலயம் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி, பாண்டிச்சேரி -கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் முன்னிலை வகிக் கிறார். நிகழ்ச்சியில் ஊட்டி மறை மாவட்ட ஆயர் பால்ராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெனிஜியஸ் உள்ளிட்ட பல்வேறு மறை மாவட்ட ஆயர்கள் பங்கேற்கின்றனர்.

நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மறை மாவட்ட ஆயர் தலைமையில் புதுநன்மை, உறுதி பூசுதல் ஆகிய அருட்சாதனங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெப வழிபாடு, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாலை 6 மணிக்கு பேராலய மகிமை என்ற தலைப்பில் சமய, சமூக, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு விழா நடக்கிறது. விழாவில் பேராலய அபிஷேக விழா சிறப்பு அஞ்சலுறை, தபால் தலை, பேராலய அபிஷேக விழா நினைவுமலர் வெளிடப்படுகிறது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

11-ந் தேதி காலை 8 மணிக்கு ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஆடம்பர ஆட்டுப்பாடற்பலி, மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. பின்னர் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெறும்.

18-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 10 மணிக்கு சிறப்பு திருப்பலி, கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. முன்னதாக புதிய ஆலய அபிஷேக விழாவில் கோவைமறை மாவட்டத்தில் உள்ள ஆலய குருக்கள், பங்குமக்கள், கன்னியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News