ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: கலங்காதிருப்பீர்களாக

Published On 2020-03-30 03:52 GMT   |   Update On 2020-03-30 03:52 GMT
நாம் பயப்படும்போது கிறிஸ்து இயேசு என்னும் கன்மலையை தைரியமாய் நம்பி நிற்போம். நம் இந்திய தேசத்திற்காகவும், நம் தமிழ் நாட்டிற்காகவும் இந்த லெந்து காலங்களில் ஜெபித்து ஜெயம் பெறுவோம் ஆமென்.
‘உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்! யோவான் 14:1

இந்த மேற்கண்ட வசனம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உரைக்கப்பட்டது. நம்முடைய இருதயம் அநேக காரியங்களை குறித்து கலங்குகிறது, குறிப்பாக இன்றைய உலக சுகாதார சூழ்நிலையக் கண்டு கலங்காதவரே இல்லை. ஆனால் நம் தேவனோ நம்மை பயப்படவே வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்துகிறார். அதனால்தான் பயப்படாதே, திகையாதே, கலங்காதே என்று ஆண்டவர் நம்மை ஆற்றித் தேற்றுவதை பார்க்கலாம். பயப்படாதே என்ற வார்த்தை மட்டும் 365 முறை பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படிஎன்றால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது கர்த்தர் நம்மை பார்த்து பயப்படாதே! நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று அன்போடு சொல்கிறார்.

கர்த்தர் இத்தனை கரிசனையோடு ஏன் பயப்படாதே, என்று தன் பிள்ளைகளுக்கு சொல்கிறார் தெரியுமா? பயம் சாத்தானுடைய கொடிய ஆயுதங்களில் ஒன்று, பயம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் முற்றிலும் நிர்மூலமாக்கக்கூடியது. ‘நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ என்று 1 யோவன் 5-ல் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் இந்த பயம் நம்முடைய ஜெபத்தை தடை செய்யும் ஆயுதமாயிருக்கிறது.

பயப்படும் எந்த கிறிஸ்தவனாலும் திறப்பில் நின்று பாரத்தோடு தன் தேசத்திற்காக ஜெபிக்க முடியாது. அற்புதத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவே முடியாது. ஜெப வீரர்களான நாமே பயத்தோடு புறமுதுகிட்டு ஓடினால் சாத்தனை வெற்றி கொள்வது, எப்படி? சாத்தானின் பொல்லாத திட்டங்களை முறியடிப்பது எப்படி?. தேவன் நமக்கு பயத்தின் ஆவியை கொடுக்கவில்லை. அப்போஸ்தலரில் ஒருவரும் பயந்ததில்லை அதனால்தான் அவர்கள் காலம் எழுப்புதலால் நிறைந்திருந்தது.

‘நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்’ என்று சங்கீதம் 56:3-ல் வாசிக்கிறோம். எனவே நாம் பயப்படும்போது கிறிஸ்து இயேசு என்னும் கன்மலையை தைரியமாய் நம்பி நிற்போம். நம் இந்திய தேசத்திற்காகவும், நம் தமிழ் நாட்டிற்காகவும் இந்த லெந்து காலங்களில் ஜெபித்து ஜெயம் பெறுவோம் ஆமென்.

சகோதரி. ரூத்பிமோராஜ்,

கே.ஜி. கார்டன், திருப்பூர்.
Tags:    

Similar News