ஆன்மிகம்

ஆன்மாவைக் காப்போம், நாமும் உயிர்ப்போம்

Published On 2017-11-23 08:13 IST   |   Update On 2017-11-23 08:13:00 IST
எந்த மனிதர்கள் தனது உள்ளம் என்ற மனக்கோவிலில் ஆன்மிக உயிரை செழுமையாக சேர்த்து வைத்தார்களோ அவர்களே இறப்புக்கு பின்பும் உயிர்ப்பார்கள்.
கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கி விட்டது என்பதை அறிவார்கள். இயேசுவின் உயிர்ப்புக்காக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். தவக்காலம் உணர்த்தும் உண்மை செய்தி என்பது மனமாற்றம் ஆகும். நமது பேச்சில், செயலில், சிந்தனையில், பண்புகளில் மாற்றங்கள் மலர வேண்டிய காலமிது.

மாங்காய் பச்சை நிறத்தில் இருக்கிறது. புளிப்பு சுவையுடன் இருக்கிறது. கடினத்தன்மையுடன் விளங்குகிறது. ஆனால் அது பழுத்து கனியாகும் போது மஞ்சள் நிறத்தினை அடைகிறது. கடினத்தன்மை மறைந்து இளகிய தன்மை அடைகிறது. புளிப்பு சுவை மறைந்து அனைவரும் விரும்பும் இனிப்புடன் கூடிய சுவையாக மாறுகிறது.

மனிதர்களும் அவ்வாறே தவக்காலத்தில் கல்லான இதயத்தை மாற்றி கனிவுள்ள இதயத்தை பெறுகின்றனர். தங்களின் பண்புகளில் மாற்றம் அடைகின்றனர். இதுதான் நிறைவான மனமாற்றம். மாம்பழம் பழுத்தவுடன் மரத்திலிருந்து பறிக்கப்படுகிறது. அதனை உண்டபிறகு மாங்கொட்டையை குப்பையில் தூக்கி எரிந்து விடுகிறோம். அதுபோல மனிதர் வாழ்நாள் நிறைவு பெற்றவுடன் மரணத்தின் வழியாக உலக வாழ்வில் இருந்து துண்டிக்கப்படுகின்றனர். கல்லறையில் புதைக்கப்படுகின்றனர். புது வாழ்வுக்கு விதைக்கப்படுகின்றனர்.



வாழ்வு முடிந்துவிட்டதென்று மாவிதை அழுவதில்லை. வருந்துவதில்லை. வாழும் போது விதைக்குள் பொதிந்து கடின ஓட்டிற்குள் தனது உயிர்சக்தியை கவனமாக வைத்திருந்து, மழை பெய்தவுடன் விதையிலிருந்து புதிய செடியாக முளைத்து பூமியை விட்டு வெளியே வருகிறது. அதாவது விதை மடியவில்லை. உயிர்த்து விட்டது.

எந்த மனிதர்கள் தனது உள்ளம் என்ற மனக்கோவிலில் ஆன்மிக உயிரை செழுமையாக சேர்த்து வைத்தார்களோ அவர்களே இறப்புக்கு பின்பும் உயிர்ப்பார்கள். பிஞ்சான, பூச்சி அரித்த, முதிர்ச்சியடையாத விதைகள் முளைப்பதில்லை. அவை மண்ணோடு மண்ணாக மக்கி விடுகிறது. ஆனால் நல்ல விதைகள் மண்ணின் சத்தை உறிஞ்சி புதிய செடியாக முளைத்து மேலே வருகின்றன. எனவே, தீமைகள் நம்மை தின்று விடாமல் ஆன்மாவை காப்போம். அப்போது நாமும் உயிர்ப்போம்.

இ.ஆனந்தன், வேதியர், கொசவபட்டி பங்கு.

Similar News