ஆன்மிகம்

அழைப்பை ஏற்போம், மனம் மாறுவோம்

Published On 2017-11-13 08:31 GMT   |   Update On 2017-11-13 08:31 GMT
நமதாண்டவர் இயேசுவே பரியேசருக்கும், சதுசேயருக்கும், தலைமை குருக்களுக்கும் இந்த மக்களை ஒரு முன்மாதிரியாக காட்டி வாழ்வில் மாற்றத்தை காண வேண்டும்.
தவக்காலத்தில், இறைவனுடைய அன்பை, இரக்கத்தை அனைவரும் நன்கு அனுபவித்து உணர்கிறோம். கடவுள் மனிதராக மாறி, மனித குல மீட்பிற்காக தன்னையே தாரை வார்த்து வழங்கியதை நினைவூட்டுகிற காலம். இது ஒரு மனமாற்றத்தின் காலம். இயேசுவை நோக்கி பயணிக்க இந்த மனமாற்றம் நமக்கு அத்தியாவசியமாக இருக்கிறது.

யோவேல் இறைவாக்கினர் புத்தகம் 2:12 வழியாக, “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். ஒருவரின் மனமாற்றம் மற்ற மக்களின் மனமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. இறைவன் யோனாவை நினிவே நகர மக்களிடத்தில் இறைச்செய்தியை எடுத்துச்செல்ல அழைத்த போது, யோனா மறுக்கிறார். மீண்டும் இறைவன் அழைத்த போது யோனா மனம் மாறி நினிவே நகரத்திற்கு சென்று மக்களிடையே இறைச்செய்தியை அறிவிக்கின்றார். (யோனா 3:3) மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார் என்று இறைவாக்கினர் யோனா புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்.



யோனாவின் செய்தியை கேட்ட நினிவே நகர மக்கள் அரசன் தொடங்கி, குழந்தைகள் வரை சாக்கு உடை உடுத்தி கடவுளை நோக்கி மன்றாடினார்கள். (யோனா 3:8) மேலும் அரசன் முதல் விலங்குகள் வரை எவரும் எதுவும் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறைவனிடம் மன்றாடி தங்களின் மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பு என்னவெனில் நினிவே நகரத்து மக்கள் யூதர்கள் அல்ல, அசீசிரியர்கள். எனினும் தீய வழியிலிருந்து தங்களது வாழ்வை மாற்றினர். இறைவனின் இரக்கத்தை கண்டறிந்தனர். (யோனா 3:10)

எனவே தான் திருவிவிலியத்தில் மனமாற்றம் என்ற உடனே நினிவே நகர மக்கள் நினைவில் வருகின்றனர். மேலும், நமதாண்டவர் இயேசுவே பரியேசருக்கும், சதுசேயருக்கும், தலைமை குருக்களுக்கும் இந்த மக்களை ஒரு முன்மாதிரியாக காட்டி வாழ்வில் மாற்றத்தை காண வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார் (லூக் 11:29-30). இதைப்போன்ற ஒரு அழைப்பானது இந்த தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, மனம் மாறி, நல்வாழ்வை பெறுவோம்.

அருட்திரு. ஆ.ஸ்டீபன் பாஸ்கர், கப்புச்சின் சபை, மேட்டுப்பட்டி.
Tags:    

Similar News