ஆன்மிகம்

கடவுள் நம்மை எப்படி பார்ப்பார் என்பதே மிக முக்கியம்

Published On 2017-11-08 04:40 GMT   |   Update On 2017-11-08 04:40 GMT
ஏசு கிறிஸ்து தம்மை புகழ்ந்தவர்களை நண்பர்கள் என்றும் எண்ணவில்லை. தேவையின்றி இகழ்ந்தவர்களை விரோதிகள் என்றும் எண்ணவில்லை.
“சிலர் அவர் நல்லவர் என்றார்கள்-யோவான்-7:12”

நம்மைக் குறித்து நாம் சரியாக பார்த்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். பிறர் நம்மை எப்படி பார்க்கின்றார்கள் என்றும், அவர்கள் நம்மை எப்படி பார்க்க முடிகிறது என்பதும் நமக்கு தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை கடவுள் எப்படி பார்ப்பார். அவருடைய பரிசுத்த கண்களுக்கு முன்பாக நாம் எப்படி தோன்றுவோம் என்ற அறிவும் மிக அவசியம்.

சில நேரங்களில் நம்மைக்குறித்து நாம் சரியாக பார்த்து, நாம் யார்? எப்படி? என்று தெரிந்து வைத்திருப்பதில்லை. எனவே நம்மை நல்லவர்கள் என்று பிறர் சொன்னால் மகிழ்ந்து விடுகிறோம். வேறுவிதமாக தாழ்வாக சொன்னால், சோர்ந்து போய் விடுகிறோம். மற்றவர்கள் நம்மை உயரம் என்று சொல்லும் போது நாம் குட்டை என்ற உண்மை தெரியப்படாமல் போய்விடும். மற்றவர்கள் நம்மை குட்டை என்று சொல்லும்போது நம்முடைய உயரம் அறியப்படாமல் போகும். நம்மை நாம் சரியாக அறிந்திருந்தால் பிறருடைய புகழ்ச்சி நம்மை மயக்கவும் செய்யாது. பிறருடைய இகழ்ச்சி நம் மனதை உடைக்கவும் செய்யாது. ஏனென்றால் நமக்கு நாம் யார்? என்பது தெரியும்.

ஏசு கிறிஸ்து தம்மை புகழ்ந்தவர்களை நண்பர்கள் என்றும் எண்ணவில்லை. தேவையின்றி இகழ்ந்தவர்களை விரோதிகள் என்றும் எண்ணவில்லை. அவரவர்களுடைய இருதயம் எப்படிப்பட்டதோ, அதற்கேற்றபடியே பிறரைக்குறித்த அவர்களுடைய மதிப்பீடுகளும் இருக்கும். நம்முடைய இருதயம் நன்றாய் இருந்தால் யாருடைய மதிப்பீடுகளும் நம்மைச் சோர்ந்து போக செய்ய இயலாது. ஒரு கூட்டம் மக்கள் ஏசுவை நல்லவர்கள் என்று புகழ்ந்தனர். அதே வேளையில் வேறொரு கூட்டத்தினர் அவரை வஞ்சிக்கின்றவன் என்று கூறி இகழ்ந்தனர். ஆனாலும் ஏசுவோ இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை.

அதே வேளையில் நம்மைக்குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற சிந்தனையும் அவசியம். ஏசு தம்முடைய சீடர்களிடம், ஜனங்கள் என்னைக்குறித்து என்ன சொல்லுகின்றார்கள். சீடர்கள் தம்மைக்குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்திட ஆர்வமாய் இருந்தார். நாம் இன்னும் நம்மை சரியாக வைக்கவேண்டுமானால் ஜனங்களின் பார்வைகளைக் குறித்த ஒரு அறிவும் அவசியமே.

எல்லாவற்றைப் பார்க்கிலும் கடவுள் நம்மை எப்படி பார்ப்பார் என்பதே மிக முக்கியம். நம்முடைய கண்களும், ஜனங்களின் கண்களும் எதையும் சரியாக அளிப்பதில் பூரணம் உடையவை அல்ல. அவர்களுடைய பார்வையில் நாம் எப்படி இருப்போம் என்ற உணர்வுதான் நம்மை மிக சரியாக வாழத் தூண்டுகிறது.

“விமர்சனங்களுக்கு விதி விலக்காக இருக்க விரும்புகின்றவன்

உண்மையின் விதிகளை விட்டு விலகித்தான் ஆக வேண்டும்.”
Tags:    

Similar News