ஆன்மிகம்

இயேசு விடுக்கும் அழைப்பு

Published On 2017-11-02 08:12 IST   |   Update On 2017-11-02 08:12:00 IST
இயேசு, உலக நாட்டங்களாகிய செல்வம், உடமைகள், ஆடம்பரம், விருந்து, பதவி போன்றவற்றை கடந்து தன்நிலை உணர்ந்து வரும் லேவிக்கு புதிய வாழ்வு கொடுத்தார்.
தவக்காலம் அருளின் காலம். அழைப்பின் காலம். மீட்பின் காலம். சிந்திக்கும் காலம். வேண்டுதலின் காலம். மனமாற்றத்தின் காலம். இன்றைய நற்செய்தியாவது, இயேசு ஒருவரை விரும்பி அழைப்பதை காட்டுகிறது. தினமும், நாம் ஒவ்வொருவரும் துயில் எழுதல் முதல் பல்வேறு அழைத்தலை கேட்கிறோம்.

நம் வாழ்வு முழுவதும் பிறப்பிலிருந்து இறப்பு வரை அழைப்புகளால் நிறைந்தது. அழைத்தலுக்கு பதிலளிக்கும் விதத்தில் தான் நாம் சிறப்படைய முடியும். யார் கூப்பிடுகிறார்? எதற்கு? என்று நாம் செவிமடுக்க வேண்டும்.

லூக்கா நற்செய்தியில், பேதுருவை இயேசு அழைத்ததில் தொடங்கி லேவியை சுங்கத்துறையில் அழைத்ததில் முடிகிறது. சாதாரண மனிதன் இருப்பதும், உழைப்பாளியின் தோற்றமும், செய்யும் தொழிலும் இறைவனுக்கு முக்கியமல்ல. அவர் பார்வை பட்டாலே போதும். அனைத்து நன்மைகளும் கிட்டும்.

ஒருசமயம் தன் வீட்டில் லேவி பெரிய விருந்து கொடுக்கிறார். இயேசுவும் அதை ஏற்கிறார். லேவியின் மீது நல்ல எண்ணம் இல்லாத பரியேசர், மறைநூல் அறிஞர்கள் அதை ஏற்கவில்லை. குறை காண்கின்றனர். பேதுருவும் மீன் பிடிக்கும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவை பின் தொடர்ந்தார்.

அதுபோல் இன்றும் இந்த தவக்காலத்தில், நோயுற்ற, பாவியான நம்மையும் மனம் மாறி தன்னுடன் இணைத்து கொள்ள இயேசு அழைக்கிறார். உடல் நோய் குணமளித்தலில் மருத்துவராக தன்னை காட்டும் இயேசு, உலக நாட்டங்களாகிய செல்வம், உடமைகள், ஆடம்பரம், விருந்து, பதவி போன்றவற்றை கடந்து தன்நிலை உணர்ந்து வரும் லேவிக்கு புதிய வாழ்வு கொடுத்தார். எனவே, அவரோடு உடனிருந்து, அருளின் அமைதியை அனுபவிப்போம். இயேசுவின் சொல் கேட்போம். அவரின் பின் செல்வோம்.

அருட்சகோதரி. ஆனி, அமலவை சபை,

புனித அந்தோணியார் கல்லூரி, திண்டுக்கல்.

Similar News