ஆன்மிகம்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கல்லறை திருநாள் வருகிற 2-ந்தேதி அனுசரிப்பு

Published On 2017-10-31 12:23 IST   |   Update On 2017-10-31 12:23:00 IST
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அன்றைய தினம் இறந்து போன தங்களின் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து ஆன்மாக்கள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் புல், பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர், தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலைகள் அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

அன்றைய தினம் காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் ‘கல்லறை திருநாள்’ என அழைக்கப்படுகிறது. அதன்படி வருகிற 2-ந் தேதி காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலையில் கல்லறை தோட்டங்களிலும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது, பங்கு அருட்பணியாளர்கள் கல்லறைகளை புனித நீரால் அர்ச்சிப்பார்கள். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

Similar News