ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: தவறை அறிதல்

Published On 2017-10-19 05:05 GMT   |   Update On 2017-10-19 05:05 GMT
கடவுளே, தவறை அறிகின்ற ஒரு அறிவை அல்ல, அதனை உணர்ந்து வேண்டாம் என்று கூறுகின்ற நல்ல மனநிலையை தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.
“தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை..”- நீதிமொழிகள்- 16:17

நண்பர் ஒருவர் தானும் சரி, தன்னுடைய மனைவியும் சரி, வீட்டை நன்கு சுத்தமாக வைக்க அதிக கவனம் செலுத்துவதில்லை. அழுக்குத் துணிகள், உடனுக்குடன் அகற்றப்படாத குப்பைகள், துடைக்கப்படாமல் தூசி படித்த பொருட்கள், ஒழுங்கின்றி தாறுமாறாய் கிடக்கும் வீட்டு சாமான்கள் என அந்த வீடு மிக மோசமாகவே காட்சியளிக்கும்.

ஆனால் இது குறித்து யாரும் அவர்களுக்குச் சொல்லி உணர்த்த தேவையில்லை. ஏனென்றால் யார் அவர்களின் வீட்டிற்கு வந்தாலும் அவர்களே முந்திக்கொண்டு எங்கள் வீடு சுத்தமாக இல்லை. எங்கள் வீட்டில் எதுவும் ஒழுங்காக இல்லை என்று ஆலயங்களில் பாவ அறிக்கை செய்வது போல மறைக்காமல் செல்லிவிடுவார்கள். ஆனால் அந்த நிலைமையை ஒரு போதும் மாற்றாமல் அதன் நடுவில் வாழ்வதற்கு பழகிக்கொண்டார்கள்.

சிலருக்குத் தவறானவைகளை தவறானவை என்று அடையாளம் காண முடிகிறது. அவை நல்லதல்ல என்று உணர முடிகிறது. அவை அகற்றப்பட வேண்டியது என்பது புரிகிறது. ஆனால் அவற்றை வெறுக்கும் மனநிலை இல்லை. அவற்றை அவர்கள் வெறுக்காததால் அவற்றை விலக்குவதற்கான உந்து விசையும் வலிமையான ஆர்வமும் இல்லை. எனவே அவற்றை அகற்றாமல் அவற்றோடு இணைந்து வாழ்வதற்கு பழகிவிட்டார்கள்.

தேவ உறவுடன் வாழ்வதை நாம் உறுதிப்படுத்தும் முக்கியமான ஓர் அடையாளம் பாவத்தை அறிதல் அல்ல. பாவத்தை வெறுத்தல் ஆகும். பரிசுத்தமான தேவனுடைய பரிசுத்த ஐக்கியம் நம்மோடு இருந்தால் தவறானவைகளை அடையாளம் கண்டு ஒத்துக்கொள்வதோடு நின்றுவிடமாட்டோம். அவற்றை வெறுக்கவும், விலக்கவும் அதிக ஆர்வம் காட்டுவோம்.

ஏனென்றால் தேவ உறவுடன் வாழ்கின்ற மனிதனால் தவறான குணங்களோடும், தவறான செயல்களோடும், தவறான பழக்கங்களோடும் சேர்ந்து உறுத்தல் இல்லாமல் வாழ முடியாது. சிலர் பிரசங்கங்களை கேட்கும் போது, சில புத்தகங்களை படிக்கும் போது கடவுள் தவறானவைகளை குறித்து தங்களுக்கு உணர்த்தியதைச் சொல்லுவார்கள். ஆனால் அவற்றை விட்டு விலகுவதற்கு எதையும் செய்யமாட்டார்கள் ஏனென்றால் மனிதனுடைய பொதுவான அறிவைக்கொண்டு கூட தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது உணர முடியும். ஆனால் அங்கே வெறுக்கின்ற ஒரு மனநிலை தோன்றாது.

கடவுள் பேசினார். கடவுள் உணர்த்தினார். கடவுள் எச்சரித்தார் என்றெல்லாம் நாம் சொல்லியும், அவ்விதம் உணர்த்தப்பட்ட காரியங்களை வெறுத்து விலக்கும் தூண்டுதல் ஏற்படாவிட்டால், நாம் கடவுளோடு இல்லை என்றுதான் பொருள் ஆகும். கடவுளே, தவறை அறிகின்ற ஒரு அறிவை அல்ல, அதனை உணர்ந்து வேண்டாம் என்று கூறுகின்ற நல்ல மனநிலையை தாரும் என்று ஜெபிக்க வேண்டும். “நீ புகழப்படும் போது புகழ்ந்ததை யார் என்பதை பார்-நீ இகழப்படும் போது உன்னை நீ யார் என்று பார்”

--சாம்சன்பால்
Tags:    

Similar News