ஆன்மிகம்

விழிப்பாயிருங்கள் - இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய நற்செய்தி

Published On 2017-10-17 14:50 IST   |   Update On 2017-10-17 14:51:00 IST
விழிப்புணர்வு என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு, தேவை என்று உணரும் நாம், விண்ணரசை அடைவதற்கு எவ்வளவோ, தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்நற்செய்தி எடுத்துரைக்கிறது.
இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம் சீடர்களுக்குப் பல நற்செய்திகளை எடுத்துரைத்தார் என்பதைப் பல வாரங்களாகத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதைப்போல இந்த வாரம் புனித மத்தேயு எழுதிய நற்செய்தியை ஒருகணம் செவிமடுப்போம்.

இந்நற்செய்தியில், ‘விண்ணரசு’ பற்றிப் பேசுகிறார்.

‘விண்ணரசு’ எப்படி இருக்கும் என்பதை, ஒரு சம்பவத்தின் வழியாக எடுத்து விளக்குகிறார். இதோ, அந்தச் சம்பவம்:

மணமகனை எதிர்கொண்டு அழைக்க, மணமகளின் தோழியர்கள் பத்துப் பேர், தங்கள் கையில் இருந்த விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அந்த பத்துத் தோழியர்களில், ஐந்து தோழியர்கள் அறிவற்றவர்கள். மீதமுள்ள ஐந்து பேர் முன்னறிவு உடையவர்கள். அறிவற்றவர்கள் ஐவரும், தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால் ‘எண்ணெய்’ எடுத்துச் செல்லவில்லை. முன்னறி உடைய ஐந்து பேரும், தங்கள் விளக்குகளோடு எண்ணெய்யையும் எடுத்துச் சென்றனர்.

மணமகன் வருவதற்குக் காலம் தாழ்ந்து விட்டது. பிறகு மணமகன் வந்தார். ‘இதோ மண மகன் வருகிறார். அவரை எதிர்கொண்டு அழைக்க வாருங்கள்’ என்று உரத்த குரல் ஒலிக்கக்கண்டனர்.

மணமகளின் தோழியர்கள் அனைவரும் எழுந்து, தங்கள், தங்கள் விளக்குகளைச் சரி படுத்தினர். அப்பொழுது அறிவற்றவர்கள், முன்னறிவு உடையவர்களைப் பார்த்து, ‘எங்களுடைய விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வைத்திருக்கும் எண்ணெய்யில், எங்களுக்கும் கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.

முன்னறிவு உடையவர்கள், அவர்களை நோக்கி, மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் போதுமான அளவு எண்ணெய் இல்லாமல் போய் விடலாம். ஆகவே வணிகம் செய்பவர்களிடம் சென்று, நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் எண்ணெய் வாங்குவதற்காக, வணிகர் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது மணமகன் வந்து விட்டார். தயாராக இருந்தவர்கள், அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு வந்த மற்றத் தோழிகளும், ‘ஐயா! ஐயா! எங்களுக்கு கதவைத் திறந்து விடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே, “விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது”.

இந்த உவமை வழியாக, நாம் உணர்வது என்ன என்பதை ஒரு கணம் சிந்திப்போம்.

பத்துத் தோழியர்களைப் பற்றி, இந்நற்செய்தி பேசுகிறது. பத்துத் தோழியர்களில், ஐந்து பேர் அறிவற்றவர்கள் என்றும், வேறு ஐவர் முன்னறிவு உடையவர்கள் என்றும் பேசப்படுகின்றது.

இந்தப் பத்துப் பேரும் மணமகளின் தோழியர்கள் தான் என்றாலும், மணமகன் எப்பொழுது வருவார் என்பதை யாரும் மதிப்பிட முடியாது என்பதை தங்களின் முன்னறிவால் ஐந்து தோழியரே அறிந்து கொள்கின்றனர். அதனால்தான் விளக்குகளைக் கொண்டு சென்றபொழுது, மிகவும் கவனமாக எண்ணெய்யையும் எடுத்துச் செல்கின்றனர். ஏனையவர்களுக்கு அதைப் பற்றிச் சிந்திக்கத் தெரியவில்லை. ஆகவே எண்ணெய்யை எடுத்துச் செல்லாமல் சென்று விட்டனர்.

முன்னறிவு உள்ளவர்கள், மிகவும் கவனமாக, இறுதி வரை இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்கிறோம். ‘அவர்கள் எங்களுக்கு எண்ணெய் தாருங்கள் என்று கேட்கும் பொழுதுகூட, எண்ணெய்யைப் பகிர்ந்து கொண்டால், ஒருவேளை எல்லோருக்கும் போதுமான அளவு இல்லாமல் போகலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.

‘முன்னறிவு’ என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை, நாம் உணர வேண்டும்.

ஒருவன் முட்டாள் தனமாக ஒரு செயலைச் செய்யும்போதுகூட, நாம் சொல்லும் முதல் வார்த்தையே, ‘உனக்கு அறிவிருக்கா? எதையும் யோசித்து செய்ய வேண்டாமா?’ என்று கேட்கிறோம் அல்லவா?

இதைத்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு பெருமான் எடுத்துரைக்கிறார்.

இந்த நற்செய்தியில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்து என்ன என்பதை ஒரு கணம் சிந்திப்போம்.

இவ்வுலகில் வாழும் மனிதர்கள், இவ்வுலகிற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர் என்றும், அவர்களுக்கு உரிய இடம் ‘விண்ணரசு’ என்றும், இயேசு பெருமான் கூறு கிறார்.

அத்தகைய விண்ணரசை அடைதல் எளிதான செயல் அல்ல என்பதுதான், அவருடைய போதனையாகும். அத்தகைய விண்ணரசை அடைய வேண்டும் என்றால், நம்மை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும். தயாராகவும் இருக்க வேண்டும். பத்துப் பேரில் ஐவர், மணமகன் தாமதமாக வந்தாலும், அவரை எதிர்கொண்டு அழைக்கத் தயாராக இருந்தார்கள். ஆகவே ஒழுக்க சீலர்களாக இவ்வுலகில் வாழ வேண்டும். அங்ஙனம் வாழ்ந்தால், விண்ணரசை எந்த நேரம் வந்தாலும் அடையலாம் என்பதுதான் இக்கருத்தாகும்.

என்ன நடக்கும் என்பதை முன்னறிவால் உணர்ந்து செயல்படுவதுதான் சாலச் சிறந்தது.

இவ்வுலக வாழ்க்கைக்கே, முன்னறிவு தேவைப்படும் பொழுது, ‘நித்திய வாழ்வை அடைவதற்கு, எந்த அளவுக்கு முன்னறிவு தேவைப்படும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

‘விழிப்பாயிருங்கள்’ என்ற வார்த்தை, இயேசு பெருமானால், பல இடங்களில் பேசப்படும் வார்த்தையாகும்.

மனித சமூகத்திலே கூட பலர், விழிப்புணர்வைப் பற்றி பேசுவதைக் கேட்கிறோம். இந்த விழிப்புணர்வு என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு, தேவை என்று உணரும் நாம், விண்ணரசை அடைவதற்கு எவ்வளவோ, தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்நற்செய்தி எடுத்துரைக்கிறது என்பதை உணர்ந்து நல்வழி நடப்போம்.

Similar News