ஆன்மிகம்

நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம்

Published On 2017-10-10 06:51 GMT   |   Update On 2017-10-10 06:51 GMT
கடவுள் படைத்த அனைத்து உயிர்களிடமும் நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம். இந்த தவக்காலத்தில் அதற்கு உறுதி ஏற்போம்.
தவக்காலம் அருளின் காலம், இறை-மனித உறவுக்கு வித்திடும் காலம். நம்பிக்கையின் காலம். நல்வாழ்விற்கு வழிகாட்டும் காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் அருட்பணியாளர் டாமியன். அவர், ஹவாய் தீவுகளில் ஒன்றான மொலாக்காய் தீவில் வாழ்ந்த தொழுநோயாளிகளிடையே பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவர், “கடவுள் தொழுநோயாளிகளாகிய உங்களிடம் மிகவும் அன்பு செய்கிறார்“ என்று அடிக்கடி கூறுவார்.

சில வருடங்களுக்கு பிறகு, “கடவுள் தொழுநோயாளிகளாகிய நம்மை மிகவும் அன்பு செய்கிறார்“ என்றார். அதற்கு காரணம், தொழுநோயாளிகளிடையே பணிபுரியும் போது அவருக்கும் தொழுநோய் உண்டானது. இறுதியில் அங்கேயே அவர் இறந்து போனார்.

கடவுள் அன்பு செய்வது, கண்ணால் காணக்கூடிய நம்மை போன்ற மனிதர்கள் வழியாகத்தான். கடவுளுடைய அன்பின் முழுமை, இயேசு கிறிஸ்து வழியாகத்தான் இந்த உலகிற்கு வெளிப்பட்டது. இயேசு கிறிஸ்து தன் சீடர்களை தேர்ந்தெடுக்கும்போது தகுதி, தராதரம் பார்க்கவில்லை. சாதாரண நிலையில் உள்ளவர்களைத்தான் சீடர்களாக தேர்ந்தெடுத்தார். புதுமைகள் புரியும் போதும், போதனைகள் செய்யும் போதும் அனைவரையும் ஒன்று போல, நிபந்தனையின்றி அன்பு செய்தார். அதன்படியே பணியாற்றினார்.

அதுபோல அருட்பணியாளர் டாமியனும் தொழுநோயாளிகளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டி பணிபுரிந்து இறந்து போனார். அனைவருக்கும் மீட்பு வழங்க தன்னையே கையளித்து, அதுவும் சிலுவைச்சாவை ஏற்பது தான் சிறந்த வழி என உணர்ந்து, விரும்பி ஏற்று நமக்காக இயேசு இறந்தார். அதற்காக அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

இதுபோன்ற அன்பின் பரிமாற்றம் சாதி, மதம், மொழி, நாடு கடந்து நடக்கும் போது இந்த உலகம் அன்பின், அமைதியின் உலகமாக மாறும். எனவே, கடவுள் படைத்த அனைத்து உயிர்களிடமும் நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம். இந்த தவக்காலத்தில் அதற்கு உறுதி ஏற்போம்.

டி.செபாஸ்டின், வேதியர், முத்தழகுபட்டி பங்கு.
Tags:    

Similar News