ஆன்மிகம்
பாந்திரா மலை மாதா ஆலயம் முன் உள்ள சிலுவையை கிறிஸ்தவர்கள் தொட்டு வணங்கியதை படத்தில் காணலாம்.

பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2017-09-11 02:50 GMT   |   Update On 2017-09-11 02:50 GMT
மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா(மவுண்ட் மேரி) ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 8-ந்தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 8 நாட்களுக்கு ஆலய திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மலை மாதா ஆலய திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்று காலை 5.30 மணி முதலே திருப்பலி நடந்து வந்தது. இதில், காலை 11.30 மணிக்கு திருவிழா தொடக்க நாள் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருவிழாவையொட்டி காலை முதலே கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு பெருந்திரளாக வருகை தந்தனர். அவர்கள் மாதாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்தனர். பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல வசதியாக பாந்திரா ரெயில்நிலைய மேற்கு பகுதியில் இருந்து ஹில்ரோடு பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருவிழாவையொட்டி பாந்திராவில் மாதா ஆலயத்தையொட்டிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சில சாலைகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கிய இந்த திருவிழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், வருகிற வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

திருவிழாவையொட்டி பாந்திரா மலை மாதா கோவில் மற்றும் அதை சுற்றிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News