ஆன்மிகம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது

Published On 2017-09-06 04:48 GMT   |   Update On 2017-09-06 04:48 GMT
மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கீழை நாடுகளில் ‘லூர்து நகர்‘ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது.

கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினந்தோறும் இரவு தேர்பவனி நடைபெற்று வருகிறது. பேராலயத்தில் இருந்து தொடங்கும் தேர்பவனி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது.



விழாவின் 8-வது நாளான நேற்று வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் புதிய பேராலயத்தில் இருந்து மண்டியிட்டு பழைய பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளையும் (வியாழக்கிழமை), அன்னையின் பிறந்தநாள் விழா நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விழாவிற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை காணிக்கையாக வழங்கி, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்கின்றனர்.

விழாவையொட்டி தினமும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலையில் வேளாங்கண்ணியில் திடீரென கடல் சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என்று கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு வந்தது.
Tags:    

Similar News