ஆன்மிகம்

மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்

Published On 2017-09-01 02:52 GMT   |   Update On 2017-09-01 02:52 GMT
யார் யாரெல்லாம் தேவனுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ அவர்களை நிச்சயம் ஆண்டவர் உயர்த்துவார். தேவ கிருபை உங்களில் அளவில்லாமல் பெருகுவதாக!
எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! உயிர்த் தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வுலகில் நடந்த சரித்திரப்பூர்வமான மூன்று சம்பவங்கள் உண்டு. 1. இயேசுவின் பிறப்பு, 2. இயேசுவின் மரணம், 3. இயேசுவின் உயிர்த்தெழுதல்.

அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவர் மரித்தது உண்மை. அதே வேளையில் தாம் சொன்னபடியே மரித்தோரிலிருந்து மூன்றாவது நாள் உயிரோடெழுந்தார். உயிரோடு அருமை இரட்சகர் எழுந்தபோது நடந்த சம்பவங்களை உங்கள் ஆசீர்வாதத்திற்காக எழுதுகிறேன்.

சொல்லுவதை செய்கிறவர்

“அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்”. மத்.28:6

எனக்கன்பானவர்களே, இப்பூமியிலே எத்தனையோ தேவர்கள் தோன்றி சில காலங்களுக்குப் பிறகு மறைந்து போனார்கள். அப்படிப்பட்டவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய சகாப்தமே முற்றுப்பெறுகிறது.

ஆனால், ‘ஆண்டவராகிய இயேசு தாம் ஊழியம் செய்த போது தனக்கு பாடுகள் உண்டென்றும், சிலுவையில் அறையப்பட வேண்டியது அவசியம் என்றும், உலகத்தின் அனைத்து மனுகுலத்திற்காக ஜீவனை கொடுக்க வந்தேன் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக மரணத்திலிருந்து உயிரோடு எழும்புவேன்’ என்றும் கூறினார்.

அவர் சொன்னபடியே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

அவர் உங்களுக்கு என்ன வாக்குத்தத்தம் உரைத்தாரோ அதை உங்களில் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். காரணம் அவர் சொல்வதை செய்கிறார். ஆகவே விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளை நம்புங்கள்.

உங்களுக்கு முன் செல்லுகிறார்

“சீக்கிரமாய் போய், ‘அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்’ என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்”. மத். 28:7

எனக்கன்பான சகோதர சகோதரியே, உயிர்த்தெழுந்த இயேசு ராஜா செய்த 2-வது காரியம், ‘அவர் உயிரோடு எழுந்தவுடன் சீஷர்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் சென்றார்’.

இவ்வார்த்தையின் அடிப்படையில் நான் உங்களுக்கு கூறுவது என்னவென்றால், ‘ஆண்டவராகிய இயேசு நமக்கு முன்பாக செல்கிறவர்’ என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். உங்களுக்கு முன்பாக ஏதாகிலும் ஒரு பிரச்சினை வருகிறது என்றால், உங்களுக்கு முன்பாக இருக்கிற அருமை ஆண்டவரைக் கடந்து தான் வருகிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே அவர் எனக்கு முன்பாக செல்லுகிறவர் என்ற உணர்வு எப்போதும் இருக்கட்டும்.

அவர் முன்னே செல்லும் போது கோணலானவைகள் சீராக்கப்படும் அல்லவா.

‘நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்’. ஏசா.45:2

காணக்கூடிய தெய்வம்

“அங்கே அவரைக் காண்பீர்கள்... என்றான்”. மத்.28:7

எனக்கன்பானவர்களே, உயிர்த்தெழுந்த ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழும்பின பிறகு தம்முடைய சீடர் களுக்கு முன்பாக சென்று அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

இது குறித்து அப்போஸ்தலர் பவுல் கூறுகிறதை பின்வரும் வசனங்களில் நாம் காண்கிறோம்:

“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த் தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு, அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர் களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு, அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்”. I கொரி.15:3-8

ஆம், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மற்றொரு சுபாவம் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறவர். ஏனென்றால் அவர் ஜீவனுள்ள தெய்வமல்லவா?

நீங்களும் அவரை விசுவாசியுங்கள், நிச்சயம் அவர் உங்களுக்குத் தென்படுவார், உங்கள் வாழ்வில் மாபெரும் எழுப்புதலைக் காண்பீர்கள்.

“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்”. ஏசா.55:6

வாழ்த்துகிற தெய்வம்

“அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு வாழ்க என்றார்”. மத்.28:9

ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்தலின் மற்றொரு அம்சம், ‘மரித்த ஆண்டவர் உயிரோடு இருக் கிறார்’ என்ற விடுதலையின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி அன்றைக்கு மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் ஓடினார்கள் என்றால் அது எத்தனை அவசரம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதுவரைக்கும் உலகத்திற்காகவும், மனுஷனுக்காகவும் ஓடின நீங்கள் இயேசுவை அறிவிக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பீர்களா? இன்னும் பல கோடி மக்கள் அறியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

கர்த்தருடை பிள்ளையே, அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையை சுவிசேஷமாக நீங்கள் அறிவிக்கும்போது அவர் தாமே உங்களுக்கு எதிர்ப்பட்டு உங்களை வாழ்த்துவார் என வேதம் கூறுகிறது.

யார் யாரெல்லாம் தேவனுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ அவர்களை நிச்சயம் ஆண்டவர் உயர்த்துவார்.

தேவ கிருபை உங்களில் அளவில்லாமல் பெருகுவதாக!

ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54
Tags:    

Similar News