ஆன்மிகம்

இயேசு பிரானின் அருஞ்செயல்

Published On 2017-08-28 05:28 GMT   |   Update On 2017-08-28 05:28 GMT
வானகத் தந்தையின் அருளோடுதான், இம்மண்ணுலகில் எதுவும் நடக்கும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதுபோல் இயேசு பிரானின் அருஞ்செயல் அடங்கி இருக்கிறது.
புனித யோவான் எழுதிய நற்செய்தியின் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.

இயேசு பிரான் கலிலேயக் கடலைக் கடந்து, மறுகரைக்குச் சென்றார். அதற்குத் ‘திபேரியக் கடல்’ என்ற ஒரு பெயரும் உண்டு. உடல் நலம் இல்லாதவருக்கு, அவர் செய்து வந்த அரும் அடையாளங்களைக் கண்டு, மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினர். கூடியதோடு மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர்ந்தும் சென்றனர்.

இயேசு மலை மீது ஏறித் தம்முடைய சீடர்களோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழாவும், அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்தார். மக்கள் பெருங்கூட்டமாக அவரிடம் வருவதைக் கண்டார்.

உடனே இயேசு பிரான், ‘பிலிப்பு’ என்பவரைப் பார்த்து, ‘இம்மக்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?’ என்று கேட்டார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை, அவர் அறிந்திருந்தும், பிலிப்பைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

பிலிப்பு என்பவர் மறுமொழியாக, ‘இருநூறு தெனாரியத்திற்கு (பணம்) அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே’ என்றார்.

அவருடைய சீடர்களுள் ஒருவரும், சீமோன் பேதுருவின் சகோதரருமான ‘அந்திரேயா’ என்பவர் இயேசு பெருமானைப் பார்த்து, ‘இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ‘ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும்’ உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு, இவை எப்படிப் போதும்?’ என்றார்.

இயேசு உடனே, ‘மக்களை அமரச் செய்யுங்கள்’ என்றார். அங்கிருந்த அப்பகுதி முழுவதும், புல் தரையாய் இருந்தது. அங்கு அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம்.

இயேசு பிரான் அப்பங்களை எடுத்தார். கடவுளுக்கு நன்றி செலுத்தினார். அங்கிருந்தவர் களுக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்து அளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்ட பிறகு, ‘ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்’ என்று தம் சீடரிடம் கூறினார்.

மக்கள் உண்டதற்குப் பின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களில் இருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள், பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள் ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டு போய், அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு, மீண்டும் தனியராய் மலைக்குச் சென்றார்.

இந்த நற்செய்தியை இரண்டு செய்திகளாகப் பகுத்து விளக்கலாம். முதல் செய்தி என்ன வென்றால், ஒரு கடலைக் கடந்து, வேறொரு கரைக்குச் செல்கிறார். அவர் இப்பகுதியில் செய்த அற்புதங்களைக் கேள்விப்பட்ட மக்கள், பெருந்திரளாகக் கூடினார்கள். முக்கியமாக, உடல் நலம் இல்லாதவர்களுக்கு அவர், உடல் நலம் அளித்த செய்தி, அதி வேகமாகப் பரவியதால் மக்களின் கூட்டம் அதிகமானது. வெறுமனே கூடிய கூட்டம் அல்ல. அக்கூட்டமும், கூடிக்கலைந்த கூட்டமும் அல்ல. அவரைப் பின் தொடர்ந்து செல்லும் கூட்டமாக இருந்தது. பின் தொடர்ந்து வருவதைக் கண்ட இயேசு பிரான், அவர்கள் பசியாற என்ன செய்வது என்று சிந்திக்கிறார்.

‘உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்’ என்பதுதானே இயல்பானது. முதலில் உண்பதற்கு உணவு வேண்டுமல்லவா?

அருகில் இருக்கும் ‘பிலிப்பு’ என்பவரைப் பார்த்து, ஒரு வினாவையும் எழுப்புகிறார். ‘எங்கிருந்து அப்பத்தை வாங்கலாம்’ என்று கேட்கிறார். அவரைச் சோதிப்பதற்காகத்தான் கேட்டார் என்பதை நற்செய்தியாளர் கூறுகிறார்.

பிலிப்பு என்பவர் அவருக்குத் தெரிந்த பதிலைச் சொல்கிறார். அதோடு மட்டும் நில்லாமல், அதிகமாகப் பணம் கொடுத்து வாங்கினாலும், சிறு துண்டுகூட ஒவ்வொருவருக்கும் கிடைக்காதே என்று கூறுகிறார்.

இயேசு பிரான் நினைத்தால் ‘முடியும்’ என்று அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ‘போதாதே, என்ன செய்வது?’ என்ற அங்கலாய்ப்புதான், பிலிப்பு என்பவரிடம் இருந்தது.

அடுத்தபடியாக ‘அந்திரேயா’ என்பவர், உணவு சிறிது இருக்கிறது. பெருங்கூட்டத்திற்கு எப்படி உணவளிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான், ‘ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் ஒரு சிறுவனிடம் உள்ளது’ என்கிறார்.

உடனே இயேசு கூறுவதைக் கேளுங்கள். அவர் கூறுவது ஒரே வரிதான். அதிகமாக அவர் பேசவில்லை. பொதுவாகச் செயல் படக்கூடியவர்கள் அதிகம் பேச மாட்டார்கள் அல்லவா?

‘மக்களை அமரச் செய்யுங்கள்’ என்றார். எல்லோரும் அந்த நேரத்தில் வியப்பாகத்தான் இதைப் பார்த்திருக்க முடியும். ஏனென்றால் இதை வைத்துக் கொண்டு இந்தக் கூட்டத்திற்கு எப்படி உணவளிக்க முடியும் என்பதுதானே அனைவரின் எதிர்பார்ப்பும், ஆர்வமும்.

இயேசு பிரான் தற்பெருமை இல்லாமல் வானகத் தந்தையை நோக்குகிறார். வானகத் தந்தையை நோக்கி, நன்றி செலுத்துகிறார். உடனே அவர்களுக்கு உணவு வழங்குகிறார். அப்பமும், மீனும் பகிர்ந்தளிக்கும்போது அனைவரும் வயிறார உண்டார்கள். பெருங்கூட்டத்திற்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர் சொன்னபடி வீணாகாமல் சேர்த்து வைத்தனர். பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.

இரண்டாவது செய்தியை கவனித்துப் பாருங்கள். இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு உணவளித்ததை வியப்பாகக் கண்ட மக்கள், ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே’. ஆகவே இவரைப் பிடித்துக் கொண்டு போய் அரசராக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார். அவர்கள் அனைவரையும் அங்கே விட்டு விட்டு தனிமையாக மலைக்குச் செல்கிறார்.

இயேசு பெருமானின் இந்த நற்செய்தியைக் கவனித்துப் பார்த்தால், இயேசு பிரானின் அருஞ்செயல் வெளிப்படுகிறது. வானகத் தந்தையின் அருளோடுதான், இம்மண்ணுலகில் எதுவும் நடக்கும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதுபோல் இச்செயல் அடங்கி இருக்கிறது.

நாமும் இயேசுவின் செயலை உணர்வோம். அவரைபோல் நம்பிக்கை கொள்வோம்.
Tags:    

Similar News