ஆன்மிகம்
சிறிய தேர்களை பெண்கள் தோளில் சுமந்து வருவதையும் படத்தில் காணலாம்.

விசுவாசபுரம் புனித மேக்சிமில்லியன் கிறிஸ்தவ ஆலய தேர்பவனி

Published On 2017-08-21 09:30 IST   |   Update On 2017-08-21 09:30:00 IST
கோவையை அடுத்த விசுவாசபுரம் புனித மேக்சிமில்லியன் கிறிஸ்தவ ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவையை அடுத்த சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் புனித மேக்சிமில்லியன் மரிய கோல்பே ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதன் சிகர நிகழ்ச்சியாக தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்றுக்காலையில் சிறப்பு திருப்பலி, புது நன்மை வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதன்பின்னர் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை ஏற்று திருப்பலி, நற்கருணை வழங்கினார். ஈரோடு சீமா சமூக சேவை இயக்குனர் அருண் ஞானபிரகாசம் மறையுரை வழங்கினார்.மறை மாவட்ட பொருளாளர் சேவியர் ஜான் குழந்தை, நல்லாயன் குருமடம் பேராசிரியர் அந்தோணி ராஜ், மதுரை மறை மாவட்ட அப்போலின் கிளாரட் ராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.


புனித மேக்சிமில்லியன் மரிய கோல்பே ஆலய தேர்பவனியில் அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் நடுவே பவனி வருவதை படத்தில் காணலாம்.

மாலையில், புனித மேக்சிமில்லியன் மரிய கோல்பேபின் தேர் பவனி நடந்தது. தேருக்கு முன்னால் பெரிய தேர்களில் இருதய ஆண்டவர், அந்தோணியார் சொரூபங்கள் கொண்டு வரப்பட்டன. மிக்கேல் சம்மனசு, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சொரூபங்களை சிறிய தேர்களில் பெண்கள் சுமந்து வந்தனர். தேர் வந்த வீதிகளில் பக்தர்கள் உப்பை வாரி இறைத்து நேர்ச்சை செலுத்தினார்கள். இரவு 9 மணியளவில் தேர் ஆலயத்தை அடைந்தது. அங்கு நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. முடிவில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குகுரு பங்கிராஸ் ஜோசப் மற்றும் பங்கு மக்கள், அந்தியங்கள் இணைந்து செய்து இருந்தனர்.

Similar News