ஆன்மிகம்

பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி காண்போம்

Published On 2017-07-19 12:24 IST   |   Update On 2017-07-19 12:24:00 IST
உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சி காண முடியும்.
மிகவும் பொருள்வசதி கொண்ட பெண் ஒருவர், தன் வாழ்வு மகிழ்வற்றதாக மாறிவிட்டது எனக்கூறி மனநல மருத்துவரை தேடி சென்றார். உடனே மருத்துவர், தன் அலுவலகத்தை சுத்தம் செய்யவந்த பெண்ணை அழைத்து, இவர் பெயர் வசந்தி. இவர் எப்படி தன் வாழ்வில் மகிழ்வை கண்டடைந்தார் என சொல்வார், தயவு செய்து கேளுங்கள், என்றார்.

அப்பெண் கூறியது, எனது கணவர் 3 மாதங்களுக்கு முன்பு இறந்தார். எனது குழந்தைகள் திருமணமாகி வெளியூர் சென்று விட்டனர். எனக்கென யாருமே இல்லை. இனி எப்படி வாழ்வது என்ற எண்ணத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றபோது, ஒரு பூனை பின்தொடர்ந்து வந்தது. அந்த பூனைக்கு ஒரு தட்டில் உணவு வைத்து கொடுத்தேன். அது சாப்பிட்டுவிட்டு அங்கே தூங்கியது. அதைக்கண்டு நான் சிரித்தேன். அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். நான் சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டது என்று. மேலும், பிறருக்கு உதவி செய்தால் மகிழ்வு கிடைக்கும் என நினைத்தேன்.

அடுத்தநாள் என் வீட்டுக்கு அருகில் படுக்கையாய் கிடந்த முதியவருக்கு உணவு கொடுத்தேன். கண்களில் கண்ணீர் வழிய அவர் தந்த புன்னகை என்னை மீண்டும் மகிழ்வில் நிறைத்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது உதவி செய்ய தொடங்கினேன். இன்று மிகவும் மகிழ்வோடு இருக்கிறேன்.

நீ எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாய் என்பதைவிட, உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். நம் இதயத்தை நிறைக்கும் உண்மையான மகிழ்ச்சி, அழுவாரோடு அழுவதிலும், சோர்வடைந்து துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதலாக இருப்பதிலும், பிறர் கண்ணீரை துடைப்பதிலும் இருக்கிறது.

இப்படி வாழ்கிற மனிதர்களை இம்மண்ணில் கண்டுபிடிப்பது அரிதாக உள்ளது. இருக்கும் இடம் போதும் என்ற மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் இம்மண்ணில் வாழ்பவர்கள் வெகு குறைவே. குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமான பொருட்களையும், செல்வங்களையும் குவித்து விடவேண்டும் என்பதே மனித ஆவலாய் உள்ளது. இதற்காக எதையும் செய்ய துணிந்தவர்களாக மனிதர்கள் மாறிவருகிறார்கள். இதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும், அன்பையும், சமாதானத்தையும் இழந்து கொண்டே வருகிறார்கள். வேதனை, விரக்தி, நிராசை, அவநம்பிக்கை, வெறுப்பு, கோபம் என கணக்கற்ற மனக்காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

இன்றைய மனிதர்களை மூன்று வகையாக பாகுபடுத்தலாம். 1) நிகழ்காலத்தை நிராகரித்து விட்டு இறந்த காலத்திலே வாழ்பவர்கள். இவர்களுக்கு சுமைகளை இறக்கவும் தெரியாது, சோகங்களில் இருந்து விடுபடவும் தெரியாது. 2) எதிர்கால கனவுகளில் நிகழ்காலத்தை இழப்பவர்கள். நாளை பற்றியே கவலைப்பட்டு நிகழ்காலத்தை இழக்கிறவர்கள். 3) வாழ்க்கையை அனுபவித்து வாழும் ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என்ற உற்சாகத்தோடு ஒவ்வொரு விடியலையும் வரவேற்கிறவர்கள்.

உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். கிடைத்ததை நெஞ்சார வாழ்த்த வேண்டும். தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சி காண முடியும்.

அருட்பணி.குருசு கார்மல்,

இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.

Similar News