ஆன்மிகம்

மனம் மாறி ஆண்டவரிடம் திரும்புங்கள்

Published On 2017-07-13 13:26 IST   |   Update On 2017-07-13 13:26:00 IST
மனம் மாறினால் சன்மானமும், மாறாவிட்டால் தண்டனையும் திருவிவிலியத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவிவிலியம் முழுவதும் மனமாற்றத்தின் செய்தி பரவிக்கிடக்கிறது.
“உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி ஆண்டவரிடம் திரும்புங்கள் (தி.ப.3:19)“

“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (மத் 18:35)“

மனமாறத் தேவை இல்லாத தொன்னூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15:7)

பல நேரங்களில் நாம் பழக்கவழக்கங்களாலும், பலவீனங்களாலும், சில நேரங்களில் தெரிந்தும் திட்டமிட்டும் சில பாவங்களைச் செய்கிறோம். திட்டமிட்டு செய்கின்ற தவறுகளை நாம் இயல்பாகவே மாற்றிவிடுகிறோம். இதுதான் மிகுந்த வருத்தமளிக்கிறது. குறைபாடுகள் நம்முடைய கோட்பாடுகளாக மாறவே கூடாது. தவறுகள் நம்முடைய தத்துவங்களாக மாறக்கூடாது. அப்படி ஒரு வேளை மாறினால் தாங்காது பூமி. இவர்களை மையப்படுத்திதான் ஏசு கூறினார் “மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள் (லூக் 13:3) “



மனம் மாறினால் சன்மானமும், மாறாவிட்டால் தண்டனையும் திருவிவிலியத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவிவிலியம் முழுவதும் மனமாற்றத்தின் செய்தி பரவிக்கிடக்கிறது. மனமாற்றம் கிரேக்க மொழியில் ‘மெட்டநோயா‘ என்று சொல்லப்படுகிறது. இதன்பொருள் மனம் கசிந்து உருகுதல் ஆகும். நம்முடைய செயல்பாடுகளும், வாழ்வுமுறைகளும், வார்த்தை பரிமாற்றங்களும் நேர்மையானவையாக இருக்கவேண்டும்.

தவறுவது இயற்கை, தவறிக்கொண்டிருப்பதே இயற்கை அல்ல. திருந்துவதும் இயற்கையாக இருக்க வேண்டும். நாம் மனம் மாறும்போது இறைவனோடும் பிறரோடும் ஒப்புரவு ஆகிறோம். இந்த ஒப்புரவு நம்மை வாழ்வில் உயர்த்திப் பிடிக்கும். விவிலியத்தில் சவுல் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ளியதால் சவுல் பவுலானார்.

ஏசு சொன்ன ஊதாரிப்பிள்ளை உவமையில் தன் தவறுகளால் தன்னையும் தன் தந்தையையும் தொலைத்துவிட்ட இளையமகன், தன் தவறுகளை உணர்ந்து, உதறித்தள்ளி, மீண்டும் தன் தந்தையிடம் வந்து மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டபோது சீரோவாக இருந்தவன் ஹீரோவாக மாறினான். நாம் என்றும் ஹீரோதானே?

- அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு

Similar News