ஆன்மிகம்

ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம் மறப்போம்

Published On 2017-07-10 11:21 IST   |   Update On 2017-07-10 11:21:00 IST
நாமும் ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம். மறப்போம். மன்னித்தல் ஒரு பலவீனம் அல்ல. அது ஒரு வீரம். கடவுளின் தனிப்பட்ட வரம்.
மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ளம் மாணிக்கக் கோவிலப்பா, இதை மறந்தவன் வாழ்வு தடந்தெரியாமல் மறைந்தே போகுமப்பா என்று பாரதிதாசன் முழங்கினார். நாம் பிறரின் குற்றங்களை மன்னிக்க வேண்டும். மன்னிக்க பழக வேண்டும். மன்னித்து மறக்கவேண்டும்.

உங்களுள் ஒவ்வொருவரும் தன் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். (மத் 19:35) எத்தனை முறை மன்னிப்பது? ஒரே நாளில் ஒருவர் ஏழுமுறை உங்களுக்கு எதிராக பாவம் செய்து ஏழுமுறையும் உங்களிடம் திரும்பி வந்து நான் மனமாறி விட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.

ஏழுமுறை மட்டுமன்று எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன் (மத் 18:22) ஏசு சொன்னதைச் செய்தார். செய்ததைச் சொன்னார். மன்னிக்கச் சொன்னார். மன்னித்தார். பாலப்பருவத்தில் தன்னைக் கொலைச் செய்யத் தேடின ஏரோதுவை மன்னித்தார். வாலிபப்பருவத்தில் மனந்திருந்திய பலரை மன்னித்தார். பாடுகளின் நேரத்தில் தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை மன்னித்தார்.



தான் சிலுவையில் தொங்கியபோது தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்தார். எனவே நாமும் ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம். மறப்போம். மன்னித்தல் ஒரு பலவீனம் அல்ல. அது ஒரு வீரம். கடவுளின் தனிப்பட்ட வரம். ஒருவரின் குற்றங்களை மட்டும் மல்ல, நம்முடைய பொருளையும் ஏசு மன்னிக்க வேண்டும் எனக்குறிப்பிடுகிறார்.

கடன்பட்ட ஒருவன் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத சூழலில் அவன் பட்ட கடனையும் (மத் 18-21:35) மன்னிக்க வேண்டும் என ஏசு அறிவுறுத்தினார். மன்னிக்கத் தெரியாமல் மன்னிக்க முடியாமல் சஞ்சலப்படுகிறோம். உறக்கத்தை இழக்கிறோம். கவலையில் மூழ்கித் தேய்கிறோம். இவை தேவைதானா? கடவுளுக்கு ஏற்றப்பிள்ளையாக மகிழ்ச்சியோடு வாழ பிறரை மன்னிப்போம், மறப்போம்.

-அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு

Similar News