ஆன்மிகம்

இயேசு வழங்கிய உவமைகள்: நல்ல சமாரியன் உவமை

Published On 2017-02-23 08:12 GMT   |   Update On 2017-02-23 08:12 GMT
கடவுளின் சட்டத்தைக் கடைபிடிக்கும் வழி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதேயன்றி ஏட்டில் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது இவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும்.
நல்ல சமாரியன் கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு உவமையாகும். இயேசு கூறிய உவமையாக அறியப்படும் இந்த உவமை நான்கு நற்செய்திகளில் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மட்டுமே காணப்படுகிறது. கடவுளின் சட்டத்தைக் கடைபிடிக்கும் வழி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதேயன்றி ஏட்டில் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது இவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும்.

இயேசு இவ்வுவமையை கூறுவதற்கான பின்னணி இவ்வாறு கூறப்பட்டுள்ளது :

இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைபேறுடைய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு இயேசு, சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கின்றீர்? என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது" என்றார்.

இயேசு, சரியாகச் சொன்னீர் அப்படியே செய்வீர் நீவிர் வாழ்வீர் என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.



உவமை :

ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளைக் கள்வர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். தற்செயலாய் அவ்வழியே வந்த சமயகுரு ஒருவர் குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். விழுந்துகிடந்தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.

கருத்து :

பரிவு, அன்பு என்பனவேயன்றி ஒருவனது சட்ட அறிவோ பதவியோ நிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரைத் தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர். இயேசு இங்கு சமாரியனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது. இன்று பண்பாடுகளுக்கு ஏற்றபடி சமாரியனின் கதாபாத்திரம் பலவாறாக உருவகப்படுத்தப்படுகின்றது.

Similar News