ஆன்மிகம்
சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று தேர்ப்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழா

Published On 2016-12-05 09:16 IST   |   Update On 2016-12-05 09:16:00 IST
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவில் பக்தர்கள் குவிந்தனர்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாள் பெருவிழா, நவம்பர் மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பெருவிழா நடைபெற்றது. பெருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் திருப்பலிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள்.

விழாவில் 3 நாட்கள் தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் விழாவன்று இரவில் தேர்ப்பவனி நடந்தது. 10-ம் நாள் விழாவையொட்டி தேர்ப்பவனி நேற்று பகலில் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார். பின்னர் மலையாள திருப்பலி நடந்தது.

அதைத்தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் அணி வகுத்து சென்றன. அப்போது பக்தர்கள் மாலைகளையும், உப்பு-நல்ல மிளகு பாக்கெட்டுகளையும் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டனர். மேலும் பல பக்தர்கள் தேர்களுக்கு பின்னாள் தரையில் விழுந்து எழுந்து கும்பிடு நமஸ்காரம் செய்து சென்றனர். இந்த தேர்கள் ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் பவனி வந்தன.

ஆலய வளாகத்தைவிட்டு தேர்கள் தெருக்களுக்கு சென்றன. அப்போது அந்தந்த தெருக்களில் உள்ளவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாலையில் தேர்கள் நிலைக்கு வந்தன. அதைத்தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.

10-ம் நாள் பெருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம்- குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர்.

மேலும் பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ரோடுகளிலும், கணேசபுரம் ரோட்டிலும் சவேரியார் பேராலய பெருவிழா பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது. மக்களின் வருகையை கணக்கிட்டு ரோட்டோரங்களில் கடைகள் ஏராளமாக இருந்தன.

விழாவை முன்னிட்டு நேற்றும், நேற்று முன்தினமும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு சென்று வரவும், தேர்ப்பவனியை தரிசிக்கவும் வசதியாக இருந்தது. பேராலய நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Similar News