ஆன்மிகம்
ஏசுநாதர் சிலையில் வடிந்த தண்ணீரை பொதுமக்கள் பாட்டிலில் பிடித்த காட்சி.

மால்வாணியில் ஏசு சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு

Published On 2016-11-12 08:19 IST   |   Update On 2016-11-12 08:19:00 IST
மால்வாணியில் ஏசு சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை மால்வாணி மேற்கு மார்வேரோடு பகுதியில், ஜனகல்யாண் சாலை ஓரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஸ்லம் சேக் அலுவலகம் எதிரே ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது போன்ற சிலை உள்ளது. இந்த சிலையில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வது வழக்கம். இங்கு எதை வேண்டினாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வழக்கம் போல் ஏசு சிலைக்கு மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர். அப்போது திடீரென ஏசு சிலையின் காலில் இருந்து சொட்டுசொட்டாக தண்ணீர் வடிந்தது. இதை பார்த்து அங்கு பிரார்த்தனையில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதை கடவுளின் அதிசயமாக பார்த்தனர்.

இந்த நிலையில் ஏசுசிலையில் இருந்து தண்ணீர் வடிந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீபோல பரவியது. இதையடுத்து பெண்கள் தண்ணீர் பாட்டிலுடன் வந்து சிலையில் இருந்து வடிந்த தண்ணீரை பிடித்து சென்றனர். ஏசு சிலை முன் மக்கள் கூடியதை அடுத்து சம்பவ இடத்திற்கு மலாடு போலீசார் சென்றனர். அவர்கள் அங்கு கூடிய பொதுமக்களை கலைத்தனர். பின்னர் போலீசார் ஏசு சிலையில் வடிந்த தண்ணீரை பிடித்து ஆய்விற்காக கலினாவில் உள்ள ஆய்வகத்திற்காக அனுப்பி வைத்தனர். ஏசு சிலையில் இருந்து தண்ணீர் வடிந்த சம்பவத்தால் நேற்று மலாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News