ஆன்மிகம்

பாவம் தவிர்த்து இறைவழி நடப்போம்

Published On 2016-10-21 08:19 IST   |   Update On 2016-10-21 08:19:00 IST
இயேசுவின் படுகொலைக்காக ரோம அரசும், யூத சமயமும் கைகோர்த்துக் கொண்டன. சிலுவை என்பது விழுங்கும் நிழலல்ல, வாழ்வளிக்கும் நிஜம்.
இறைமகன் இயேசு நம்மை பாவங்களிலிருந்து மீட்க மனிதனாக வந்து சிலுவையில் பலியானார். அவரை மீட்பராக ஏற்றுக்கொள்ளும் அனைவரும் அவருடைய மீட்பில் இணைந்து கொள்கின்றனர். அவரை நம்பும் யாரையும் அவர் தள்ளி விடுவதில்லை.

இயேசுவின் மண்ணுலக நாட்களின் இறுதியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அன்றைக்கு அரசியலில் முன்னணியில் நின்ற ரோம அரசாங்கமும், அறநெறிச் சமயத்தில் உயர்ந்து நின்ற யூத சமூகமும் இணைந்தே இயேசுவின் மீது பழி சுமத்தின. அதன் மூலம் தங்களுடைய இழிநிலையை அவர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

இயேசுவின் படுகொலைக்காக ரோம அரசும், யூத சமயமும் கைகோர்த்துக் கொண்டன. இந்த மரணதண்டனைக்காக இயேசு செய்த குற்றங்கள் என்ன? முக்கியமாக நான்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

1. ஆலயம் சார்ந்த குற்றச்சாட்டு: புனிதமான ஆலயத்துக்கு எதிராக இயேசு பேசியதாய் கட்டப்பட்ட கதைகள் முதலாவது குற்றச்சாட்டாய் வந்து விழுந்தன. ‘ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் கட்டுவேன் என்று சொன்னார்’ என்பது அந்தக் குற்றச்சாட்டு.

‘மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்’ என்று அவருக்கு எதிராகச் சிலர் பொய்ச் சான்று கூறினர் (மார்க் 14 :57,58 ).

அது பொய் குற்றச்சாட்டு என்பதை பைபிள் நமக்குச் சொல்கிறது.

2. ஆள் தன்மையின் மீதான குற்றச்சாட்டு: இரண்டாவதாய் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது அவருடைய ஆள் தன்மையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ‘இவர் கடவுளின் மகனாகத் தன்னைக் கூறிக்கொண்டார்’ என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.

இயேசு தன்னைக் கடவுளின் மகன் என்று சொன்னதால் அவர் கடவுளைப் பழித்துரைக்கிறார் எனும் கடுமையான குற்றச்சாட்டுக்குள் தள்ளப்பட்டார்.

3. மக்களை சீரழித்தார் எனும் குற்றச்சாட்டு: ‘மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான்’ (லூக்கா 23:14) என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. இயேசுவின் பின்னால் மக்கள் அணி திரள்வதைக் கண்டு அச்சப்பட்ட மதவாதிகள், இயேசு மக்களை கலகத்துக்குத் தூண்டி விடுகிறார் என குற்றம் சாட்டினர்.

உண்மையில் இயேசு மக்களைக் கலகத்துக்குத் தூண்டவில்லை. ஏழை எளிய மக்களின் பக்கமாக நின்றார். அதற்காக பரிசேயர்களையும், மறை நூல் வல்லுநர் களையும் எதிர்த்தார்.

4. அரசுக்கு எதிரானவர் எனும் குற்றச்சாட்டு: இயேசு தன்னை அரசர் என்றும், அரசர்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றும் சொன்னதாய் புனையப்பட்ட பொய் நான்காவது குற்றச்சாட்டு. ‘சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான்’ (லூக்கா 23:2) என்கிறது விவிலியம்.

உண்மையில் இயேசு, ‘கடவுளுக்குரியதை கடவுளுக்கும், அரசருக்குரியதை அரசருக்கும் கொடுங்கள்’ என்று சொன்னவர். அவரே வரி செலுத்தினார் என்பதையும் விவிலியம் நமக்குக் காட்டுகிறது.

இயேசுவின் மீது இப்படி அடுக்கடுக்காய் குற்றம் சாட்டியவர்கள் முக்கியமாக மூன்று குழுவினர். ஒன்று, மக்களின் மூப்பர்கள். இரண்டாவது தலைமைக் குருக்கள். மூன்றாவது மறை நூல் அறிஞர்கள். சுருக்கமாக, மதவாதிகள் என்று சொல்லலாம்.

இயேசுவின் மீது வெறுப்பு கொண்டு தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகிறார்கள் என்பதை அரசு அறிந்திருந்தது.

‘நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை, மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை, இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்’ என்பதே அரசின் நிலைப்பாடாய் இருந்தது.

ஆனாலும் இறுதியில் இயேசு படுகொலை செய்யப்பட்டார். அதை எதிரிகள் வெற்றி என கொண்டாடினர், ஆனால் அதுவே இறைவனின் சித்தம் என்பதை அவர்கள் அறியவில்லை.

இது ஏதோ அன்று மட்டும் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. நமது வாழ்க்கையின் பயணத்தில் இந்த நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது.

‘நான் இன்னும் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன், முத்தத்தால் மனுமகனைக் காட்டிக் கொடுத்த யூதாஸைப் போல’.

“நான் இன்னும் இயேசுவை மறுதலித்துக் கொண்டே இருக்கிறேன். உயிருக்குப் பயந்து ‘இவரை அறியேன்’ என்ற சீடர் சீமோனைப் போல”.

‘நான் இன்றும் அவரை விட்டு விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன். படைக்குப் பயந்து சிதறி ஓடிய இயேசுவின் சீடர்களைப் போல. நிழலை நிஜம் என நம்பி பாவத்தினால் இறந்து கொண்டிருக்கிறேன்’.

ஒரு கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று பாலை நிலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் உக்கிர தாண்டவம் ஆடியது. அந்த வெப்பத்தின் அனலை பாம்பினால் தாங்க முடியவில்லை. மணல் அதன் உடலைப் பொசுக்கியது. எனவே அது தனது வாலை மட்டும் பூமியில் ஊன்றி முழு உடலையும் அந்தரத்திலே நிறுத்தியது. கொஞ்சம் தன்னை அது ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு தவளை வந்தது.

வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாத தவளை நிழல் தேடி அலைந்தது. அதன் கண்களுக்குத் தென்பட்டது பாம்பின் நிழல். நிழல் கிடைத்துவிட்டதே எனும் ஆனந்தத் தில் அது பாம்பின் நிழலிலே இளைப்பாற அமர்ந்தது. தன்னைத் தேடி வந்த விருந்தை பாம்பு சும்மா விடுமா? அலேக்காக விழுங்கி பசியைத் தீர்த்துக் கொண்டது.

பாவம் என்பது நிஜத்தை விழுங்கும் நிழல்.

‘இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்’ (ரோமர் 12 :2) என்கிறது பைபிள்.

சிலுவை என்பது விழுங்கும் நிழலல்ல, வாழ்வளிக்கும் நிஜம்.

இந்த உண்மையை உணர்ந்து வாழ்வோம். இறைஆசீர் உங்களை நிரப்பட்டும்.

ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

Similar News