ஆன்மிகம்

குடும்ப வாழ்வில் ஒரே மனம்

Published On 2016-10-14 07:23 IST   |   Update On 2016-10-14 07:23:00 IST
உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் ஒரே சிந்தையோடு வாழவேண்டும் என்பதே தேவ சித்தம்.
பிரியமானவர்களே, இவ்வுலக வாழ்வில் தேவன் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம் குடும்பம்தான். கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைக் காணக்கூடிய மிக முக்கியமான இடம் குடும்பம்தான்.

இக்கடைசி நாட்களில் சத்துரு தனக்குக் கொஞ்ச நாட்கள் தான் உண்டு என அறிந்து, தந்திரமாக அநேக குடும்பங்களை உடைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்.

‘அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’. (2.கொரி.2:11)

ஆம் பிரியமானவர்களே! அவனுடைய தந்திரங்களை எதிர்த்துப் போராடுகிற முதல் ஆயுதம் வசனம். இரண்டாவது ஆயுதம் ஜெபம். ஜெபத்தோடு இச்செய்தியை வாசியுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

‘மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்’ (ஆதி.2:18) என்று நம் அருமை ஆண்டவர் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை உருவாக்கினார்.

அன்பான சகோதரிகளே! உங்கள் கணவருக்கு ஏற்ற துணை நீங்கள் தான் என்பதை அறிந்து கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் கணவரை அதிகமாக கனம் பண்ணுங்கள்.

அதைப் போல கணவர்களும், உங்கள் ஏற்ற துணை உங்கள் மனைவியே என்பதை அறிந்து தேவனை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்வில் தேவனின் நோக்கம் நிறைவேறும்.

உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் ஒரே சிந்தையோடு வாழவேண்டும் என்பதே தேவ சித்தம். ஆகவே ஒவ்வொருநாளும் குடும்பமாக ஜெபம் பண்ணுங்கள்.

பிரச்சினைக்கு ஆரம்பமாக சில வாக்குவாதங்கள், சண்டைகள் வரும்போது உடனே அதை விட்டு விட்டு ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து விடுங்கள். அப்பொழுதுதான் ‘எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ (பிலிப்.4:7).

ஜெபத்தின் மூலமாக உங்கள் குடும்ப வாழ்க்கைக் கட்டினால்தான் உங்கள் குடும்பத்தில் ஒரே மனதை காணப்படும். அப் போதுதான் உங்கள் குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்படும்.

சத்துரு பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வந்து நம்மை வேதனைப்படுத்தி, நம் குடும்ப வாழ்வை உடைக்க வேண்டுமென்று தந்திரமாய் நம் குடும்ப வாழ்வில் நுழைய முற்படுவான். அவன் எடுக்கிற முதல் ஆயுதம் நம் குடும்பத்தில் ஒற்றுமையைக் கெடுக்கப் பார்ப்பான்.

ஆனால் அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவனுக்கு ஒருநாளும் இடம் கொடா திருங்கள். ‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ (யாக்.4:7).

பிசாசை எதிர்த்து நிற்பதற்கு வேத வசனங்கள் மிக மிக அவசியம். இயேசு ராஜாவை பிசாசு வனாந்தரத்தில் சோதிக்க வந்தபோது வசனங்களை வைத்து தானே எதிர்த்து நின்றார். எனவே அதிகமாக வேத வசனங்களை வாசியுங்கள். அவற்றை அறிக்கைச் செய்யுங்கள். அப்பொழுது பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான். உங்கள் குடும்பத்திலே ஒருமனம், ஒற்றுமை காணப்படும். நிச்சயம் உங்கள் குடும்பத்தை ஆண்டவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்,

‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

Similar News