ஆன்மிகம்

மேலப்புதூர் புனித மரியன்னை பேராலய தேர்பவனி

Published On 2018-09-10 03:19 GMT   |   Update On 2018-09-10 03:19 GMT
திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலய பங்கு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைத்தார். இதையொட்டி நவநாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடந்தது. 10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு, கீரனூர் அம்மாசத்திரம் மலைமாதா திருத்தல பங்கு தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் மணித்திருப்பலியை நடத்தினார்.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு பேராலயத்தில் அன்னையின் தேர்பவனியை புனிதப்படுத்தி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதை திருச்சி ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற அருட்தந்தை மரியானுஸ் ஐசக் நடத்தினார். அதைத்தொடர்ந்து அருங்கொடை இல்ல இயக்குனர் ஆல்பர்ட் மறையுரை நடத்தினார். பின்னர் பேராலய வளாகத்தில் இருந்து 3 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

புனித மரியன்னை பேராலய பங்கு தந்தை த.சகாயராஜ் தலைமையில் நடந்த தேர்பவனியில் அருட்தந்தைகள் ஆ.சகாயராஜ், மரியலூயிஸ் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு முன்பாக கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி கிறிஸ்தவர்கள் சென்றனர்.

பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனியானது மேலப்புதூர் கான்வென்ட் ரோடு, பீமநகர் மார்சிங்பேட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேராலய வளாகத்தை அடைந்தது. அதன் பின்னர் நர்கருணை ஆசீர் வழங்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. 
Tags:    

Similar News