ஆன்மிகம்
திருச்செந்தூர் அமலிநகர் அமலி அன்னை ஆலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்தபடம்.

திருச்செந்தூர் அமலி அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது

Published On 2017-08-31 10:09 IST   |   Update On 2017-08-31 10:09:00 IST
தூத்துக்குடிதிருச்செந்தூர் அமலிநகரில் உள்ள அமலி அன்னை ஆலய 77-வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடிதிருச்செந்தூர் அமலிநகரில், அமலி அன்னை ஆலயம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் தனிபங்காக உருவெடுத்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டாகிறது. இதனால் ஆலயத்தின் 77-வது ஆண்டு பெருவிழா நிகழ்ச்சி மற்றும் தனிபங்கான 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி கொடியேற்றம் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் மணவை மறைவட்ட முதல்வர் பங்குதந்தை சகாயம் தலைமையில் கொடிபவனி மற்றும் காணிக்கை பவனி முக்கிய வீதி வழியாக ஆலயம் வந்தடைந்தது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு லூர்த்தம்மாள்புரம் பங்குதந்தை பிராங்களின் பர்னாந்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் அன்னைக்கு தங்க மணி மகுடம் சூட்டப்பட்டது. காலை 7.40 மணிக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க பங்குதந்தை திருவிழா கொடியேற்றினார். அப்போது உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கூட்டப்புளி பங்குதந்தை ரஞ்சித்குமார் கர்டோசா, சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை சில்வெஸ்டர் பர்னாந்து, இடிந்தகரை பங்குதந்தை சேசுதாஸ் பர்னாந்து, ஜீவாநகர் பங்குதந்தை சகேஷ்சந்தியா, அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து உள்பட திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

2-ந் தேதி அமலிநகர் அன்னை தனிபங்கான 50 ஆண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம் நடக்கிறது.

வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட புதிய ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 8-ந் தேதி அமலி அன்னையின் 77-வது ஆண்டு பெருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News