ஆன்மிகம்
புனித அன்னம்மாள், ஆலயத்தை படத்தில் காணலாம்.

புனித அன்னம்மாள் ஆலய தேர்ப்பவனி இன்று நடக்கிறது

Published On 2017-07-26 10:32 IST   |   Update On 2017-07-26 10:33:00 IST
அஞ்சுகிராமத்தை அடுத்த ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலய தேர்ப்பவனி இன்று நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
அஞ்சுகிராமத்தை அடுத்த ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. அணைக்கரை, கூட்டப்புளி, அழகப்பபுரம் ஊர்களின் கிளை கிறிஸ்தவ பங்காக செயல்பட்ட ரஜகிருஷ்ணாபுரம் 1963 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தனிபங்காக செயல்பட தொடங்கியது.

இந்த ஆலயத்தில் தேவ அன்னைக்கு விவிலியத்தை விளக்கும் சொரூபம் மிக பிரசித்தி பெற்றது. ஆலய பீடத்தின் இடதுபுறம் புனித சூசையப்பர் சொரூபம், வலதுபுறம் புனித அன்னம்மாள் சொரூபம் உள்ளது. பீடத்தின் முன் புனித அந்தோணியார் சொரூபம் அழகாக காட்சி அளிக்கிறது.

இங்கு தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமைகளில் 5.30 மணி மற்றும் காலை 7 மணிக்கு என 2 திருப்பலிகளும் நடைபெற்று வருகிறது.

வியாழன்தோறும் புனித அன்னம்மாள் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடக்கிறது. செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோணியார் ஆலயத்தின் பின்புறம் உள்ள மாதா கோவிலில் ஜெபமாலையுடன் மறையுரை, திருப்பலி நடக்கிறது. புனித அன்னம்மாள் ஆலயத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து அருள் பெற்று செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் இறுதி நாளான இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு இளைஞர்கள் சார்பில் நாடகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்குபேரவை துணைத்தலைவர் எட்வர்ட் டொமினிக்ராஜன், செயலாளர் நெல்சன், துணை செயலாளர் லீலா, பொருளாளர் லலிதா, பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்துள்ளனர்.

Similar News