ஆன்மிகம்

வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தல்

Published On 2017-01-16 09:16 IST   |   Update On 2017-01-16 09:16:00 IST
இயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. எனவே, கடவுள் அச்சோதனைகளின் முடிவில் இயேசுவுக்கு வானதூதர் வழியாக உணவளித்தார்.
நோன்பிருந்தபோது தம்மை சோதித்த அலகையை முறியடித்ததும், வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர் (மத்தேயு 4:11). ஓவியர்: ஜேம்சு டிஸ்ஸோ. காப்பிடம்: ப்ரூக்ளின் கலைக்கூடம்

நற்செய்திகளின்படி, இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டு அச்சோதனைகளை வென்றார். "அலகை இயேசுவை விட்டு அகன்றது"; "உடனே வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்" (மத். 4:11). லூக்கா கூற்றுப்படி, "அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும் வரை இயேசுவை விட்டு அகன்றது" (லூக் 4:13). எனவே, அலகை மீண்டும் திரும்பிவரும் என்ற கருத்து தொக்கிநிற்கின்றது.

மாற்கும் மத்தேயுவும் "வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்ததை" குறிப்பிடுகின்றனர். லூக்கா அக்குறிப்பைத் தரவில்லை. மத்தேயு நற்செய்தியின்படி, இங்கு மீண்டும் ஒருமுறை இயேசு எலியாவோடு ஒப்பிடப்படுவது தெரிகிறது (காண்க: 1 அரசர்கள் 19:4-9). எலியாவுக்குக் காகங்கள் உணவு கொண்டுவந்தன.

இயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, சோதனைகளின் நடுவிலும் நிலைத்து நின்றார். எனவே, கடவுள் அச்சோதனைகளின் முடிவில் இயேசுவுக்கு வானதூதர் வழியாக உணவளித்தார். சிலர் வானதூதர் செய்த பணிவிடை அவர்கள் அலகையைத் துரத்தியதைக் குறிக்கிறது என்று விளக்குகின்றனர்.

Similar News