ஆன்மிகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நள்ளிரவு நடக்கிறது

Published On 2016-12-24 09:17 IST   |   Update On 2016-12-24 09:18:00 IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான பண்டிகையாகும். ஏசு பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும், பரிசுகளையும் பரிமாறுதல், கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், கிறிஸ்துமஸ் பாடல், சிறப்பு விருந்து என்பன அடங்கும்.

இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாட்டு தொழுவத்தில் ஏசு பிறந்ததை நினைவு கூரும் வகையில் தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவர்களின் வீடுகள், கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் கிறிஸ்து பிறப்பின் மகிமையை வெளிக்காட்டும் வகையில் வீடுகள் மற்றும் ஆலயங்களில் நட்சத்திரங்கள்(ஸ்டார்) மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. மேலும் ஆலய சுவர்களிலும், ஆலய வளாகத்தில் உள்ள மரங்களிலும் மின்விளக்குகள் ஜொலிக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை இன்று(சனிக் கிழமை) நள்ளிரவு நடக்கிறது. அதேபோல பல கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறு கிறது. நாளை(ஞாயிற்றுக் கிழமை) அதிகாலையில் பல கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, தெற்குவீதி உள்பட பல்வேறு இடங்களில் கடைகளில் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம், பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

Similar News