கிரிக்கெட்

உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த யுவராஜ் சிங்கை பாராட்டாதது ஏன்?: சர்ச்சையை கிளப்பிய கம்பீர்

Published On 2023-12-10 05:53 GMT   |   Update On 2023-12-10 05:54 GMT
  • 2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றார்.
  • உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்த யுவராஜை பாராட்டாதது ஏன் என கம்பீர் கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி:

இந்திய அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. கபில்தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவரது தலைமையிலான அணி சொந்த மண்ணில் 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்த உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான அவர் 362 ரன்கள் குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி னார்.

இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள்.

யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள மக்கள் தொடர்பு குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

நீங்கள் ஒருவரை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவர் அதிகமாக வெளியில் தெரியமாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய பாராட்டு கிடைக்காது. ஒருவரை மட்டுமே தொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர் பிராண்டாக மாறிவிடுவார்.

இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்தும் அணியாக மாறி உள்ளது.

முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் கடினமாக உழைப்பு பாராட்டுகளுக்கு உரியதாகும் என தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் போட்டியின்போது காம்பீருக்கும், ஸ்ரீசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் யுவராஜ்சிங்குக்கு உரிய பாராட்டு கிடைக்கவில்லை என்று காம்பீர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News