கிரிக்கெட்

அவர் பாகிஸ்தானின் பெருமை- பாபர் அசாம் கேப்டன்சி குறித்த விமர்சனத்துக்கு ஷாஹீன் அப்ரிடி ஆதரவு

Published On 2022-12-21 09:15 GMT   |   Update On 2022-12-21 09:15 GMT
  • பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது,
  • பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆட்டங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முல்தானில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், கராச்சியில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார். ஆனால் ஏமாற்றமளிக்கும் முடிவுக்குப் பிறகு, அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

பாபரின் கேப்டன்சிக்காக பலர் அவரை விமர்சித்து வரும் நிலையில், அவரது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, அவரது கேப்டனுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.

கொஞ்சம் மரியாதை காட்டுங்கள் என்று ரசிகர்களை வலியுறுத்திய ஷஹீன் டுவிட்டரில் ஒரு பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பாபர் அசாம் எனது பெருமை, பாகிஸ்தானின் பெருமை என்று பாராட்டிய அவர், ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடருமாறு கேட்டுக் கொண்டதுடன், கதை இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பட்டிருந்தார்.

பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News