கிரிக்கெட்

உம்ரான் மாலிக் - ஹர்த்திக் பாண்ட்யா 

உம்ரான் மாலிக்குக்கு கடைசி ஓவரை வீச கொடுத்தது ஏன்? ஹர்த்திக் பாண்ட்யா விளக்கம்

Update: 2022-06-29 05:39 GMT
  • உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல.
  • இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை.

டுப்ளின்:

இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது.

இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது.

3-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 57 பந்தில் 104 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரியும் , 6 சிக்சர்களும் அடங்கும். சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன் ( 9 பவுண்டரி,4 சிக்சர் ) எடுத்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 85 பந்துகளில் 176 ரன் குவித்தது முக்கியமானதாகும்.

அயர்லாந்து அணி தரப்பில் மார்க் ஆதிர் 3 விக்கெட்டும், ஜாஸ் லிட்டில், கிரேக் யங் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

226 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து ஆடியது. பால் ஸ்டிர்லிங்-கேப்டன் பால்பிரீன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. 3.5 ஓவரில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.

ஸ்கோர் 72 ரன்னாக ( 5.4 ஓவர்) இருந்த போது தொடக்க ஜோடியை ரவி பிஷ்னோய் படேல் பிரித்தார். ஸ்டிர்லிங் 18 பந்தில் 40 ரன் ( 5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தார். அடுத்து வந்த டெலனி ரன்எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.

மறுமுனையில் இருந்த கேப்டன் பால்பிரீன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37 பந்தில் 60 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அவரது ஸ்கோரில் 3 பவுண்டரியும், 7 சிக்சரும் அடங்கும். அப்போது அயர்லாந்து 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் என்ற நிலையில் இருந்தது.

ஒரு ஓவருக்கு 12 ரன்னுக்கு மேல் தேவைப்பட்டது. அயர்லாந்து வீரர்கள் ஹேரி டெக்டரும், ஜார்ஜ் டாக்ரெலும் சளைக்காமல் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 38 ரன் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.

18-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 7 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். டெக்டர் 28 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.

ஹர்சல் படேல் வீசிய 19-வது ஓவரில் அயர்லாந்து 14 ரன் எடுத்தது. மார்க் ஆதிர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது.

உம்ரான் மாலிக் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. அடுத்த பந்து நோபால் ஆனது. 2-வது மற்றும் 3-வது பந்தில் அடுத்தடுத்து ஆதிர் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 3 பந்தில் அயர்லாந்து வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. ஆனால் உம்ரான் மாலிக் நேர்த்தியாக வீசி 3 ரன்களே கொடுத்தார். அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாக்ரெல் 16 பந்தில் 36 ரன்னும் (3 பவுன்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர்குமார், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஸ்னோய் தலா ஒரு விக்க்ட் கைப்பற்றினார் கள்.

இந்த வெற்றி மூலம் 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கடைசி ஓவரை புதுமுக வீரரான உம்ரான் மாலிக்குக்கு கொடுத்து ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். உம்ரான் மாலிக் மீது முழு நம்பிக்கை இருந்தது.

அவருடைய பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல. அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தனர். ஆனாலும் உம்ரான் மாலிக் நேர்த்தியாக விளையாடினார். அவர் மீதுள்ள நம்பிக்கையால் கடைசி ஓவரை கொடுத்தேன்.

நெருக்கடியான இந்த நேரத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

Tags:    

Similar News