கிரிக்கெட்

சர்ச்சையை ஏற்படுத்தியது ஜெகதீசன் ரன் அவுட்

சர்ச்சையை ஏற்படுத்தியது ஜெகதீசன் ரன் அவுட்: விதிப்படி சரியா?

Update: 2022-06-24 07:21 GMT
  • தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெகதீசன் 15 பந்தில் 25 ரன் எடுத்தார்.
  • நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கும் சமயத்தில் ரன்-அவுட் செய்யப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

டி.என்.பி.எஸ். கிரிக்கெட்டில் நெல்லை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்ஸ்மேன் ஜெகதீசன் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

பாபா அபராஜித் பந்துவீச ஓடி வந்தபோது, அந்த முனையில் நின்றிருந்த ஜெகதீசன் முன்னோக்கி நகர்ந்து சென்றார். அப்போது அவரை பாபா அபராஜித் ரன்-அவுட் செய்தார். இதனால் ஜெகதீசன் அதிருப்தியுடன் வெளியேறினார். இதுபோன்ற அவுட் மன்கட் முறை என்று அழைக்கப்பட்டு வந்தது. அதில் ஐ.சி.சி. திருத்தம் செய்து புதிய விதியை வெளியிட்டது.

41.16 விதிப்படி, பந்து வீச்சாளர் சாதாரணமாக பந்தை விடுவிப்பார் என்று எதிர்பார்க்கும் வரை எந்த நேரத்திலும், அந்த முனையில் இருக்கும் வீரர் கிரீசை விட்டு வெளியே இருந்தால் ரன்-அவுட் செய்யப்படலாம்.

அதேபோன்ற சூழ்நிலையில் பந்து வீச்சாளர், பந்தை ஸ்டெம்பு மீது வீசுவதன் மூலமோ அல்லது கையால் பந்தை பிடித்து ஸ்டெம்பை அடிப்பதன் மூலமோ ரன்-அவுட் ஆகலாம் என்பதாகும். "ஆனால் பாபா அபராஜித் பந்து வீசிய சமயத்தில் ஸ்டெம்ப் அருகே வந்தபோது ஜெகதீசனின் கால் கிரீஸ் மீது இருந்தது.

அபராஜித் பந்தை கையில் இருந்து விடுவிப்பதற்கான ஆக்‌ஷன் செய்த போது ஜெகதீசனை பார்த்தபடி திடீரென்று பந்து வீசுவதை நிறுத்தினார். அவர் பந்தை ஸ்டெம்ப் அருகே கொண்டு செல்லும் போதும்கூட ஜெகதீசனின் பேட் கிரீஸ் மீது இருந்தது. பின்னர் ஜெகதீசன் கிரீசை விட்டு சிறிது நகர்ந்ததும் அவரை அபராஜித் ரன்-அவுட் செய்தார். இதனால் இந்த ரன்-அவுட் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விதிப்படி இந்த ரன்-அவுட் சரியானதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெகதீசன் 15 பந்தில் 25 ரன் எடுத்தார். அவர் நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கும் சமயத்தில் ரன்-அவுட் செய்யப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

Tags:    

Similar News