கிரிக்கெட்

தேவன் கான்வே

null

இரண்டாவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து

Published On 2023-01-11 17:29 GMT   |   Update On 2023-01-11 18:08 GMT
  • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார்.
  • 43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ரன்களில் சுருண்டது.

கராச்சி:

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவன் கான்வே 101 ரன்கள் குவித்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர் பகார் ஜமான் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

3வது வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த அவர் தொடர்ந்து முன்னேறினார். ஆனால், முறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. பாபர் ஆசம் 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர். தேவன் கான்வே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 13ம் தேதி நடக்கிறது.  

Tags:    

Similar News