இவர்களால் மட்டுமே முடியும்... நியூசிலாந்து வீரர்கள் இணைந்து பிடித்த அபாரமான கேட்ச்....
- முதலில் விளையாடிய வெலிங்டன் அணி 147 ரன்கள் சேர்த்தது.
- மத்திய மாவட்டங்கள் அணி 16.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெலிங்டன்- மத்திய மாவட்டங்கள் (Central Districts) அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெலிங்டன் அணி 147 ரன்கள் எடுத்தது.
பின்னர், மத்திய மாவட்டங்கள் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வில் யங், ஜெக் பாய்லே ஆகியோர் களம் இறங்கினர். 6-வது ஓவரின் 2-வது பந்தை வில் யங் தூக்கி அடித்தார். பந்து மிட் ஆன்- மிட்ஆஃப் இடையே பவுண்டரி லைன் நோக்கி பறந்து சென்றது. மிட் ஆன் திசையில் நின்றிருந்த ட்ராய் ஜான்சன் பந்தை நோக்கி சென்றார்.
பின்நோக்கி ஓடிய அவர் பந்தை பாய்ந்து பிடித்தார். பந்தை பிடித்த வேகத்தில் விழுந்த அவர் சறுக்கிக் கொண்டு பவுண்டரி லைனை தொடும் வகையில் சென்றார். பவுண்டரி லைனை தொடுவதற்குள் பந்தை தூக்கி உள்நோக்கி போட்டார்.
இவர் ஓடி வந்த அதேவேளையில் மைக்கேல் ஸ்னேடன் மிட்ஆஃப் திசையில் இருந்தும் ஓடி வந்தார். ஜான்சன் தூக்கிப்போட்ட பந்தை, ஸ்னேடன் கேட்ச் பிடித்தார். இதனால் வில் யங் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்த கேட்ச் நம்ப முடியாத வகையில் இருந்தது. போட்டியை நேரில் கண்டு ரசித்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். பொதுவாக நியூசிலாந்து வீரர்கள பவுண்டரி லைனில் பந்தை பிடித்து பின்னர் தூக்கி போட்டு பிடிப்பது, பவுண்டரி லைனை தாண்டும்போது ஒருவீரர் பந்தை தூக்கிப்போட மற்றொரு வீரர் பந்தை பிடிப்பது எளிதான விசயம்தான்.
இந்த போட்டியில் மத்திய மாவட்டங்கள் அணி 16.5 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.