கிரிக்கெட்

குறைந்த பந்துகளில் சதம்: கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Published On 2023-03-27 06:38 GMT   |   Update On 2023-03-27 06:38 GMT
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் 2-வது அதிவேக சதம் இதுவாகும்.
  • இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது.

செஞ்சூரியன்:

தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி காட்டியது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சு துளி கூட எடுபடவில்லை.

மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். இந்தியாவின் ரோகித் சர்மா, தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், செக்குடியரசின் விக்ரமசேகரா ஆகியோர் தலா 35 பந்துகளில் மூன்று இலக்கத்தை தொட்டதே மின்னல்வேக சதமாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை சார்லஸ் மேலும் இரு வீரர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அதிவேக சதம் கண்டவரான கிறிஸ் கெய்லின் (47 பந்தில் சதம், இங்கிலாந்துக்கு எதிராக) சாதனையையும் அவர் தகர்த்தார். இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது.

இருப்பினும் அடுத்து வந்த தென்ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப் பிடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News