கிரிக்கெட்

தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக சதம் தேவை- இந்திய வீரருக்கு கங்குலி வலியுறுத்தல்

Update: 2023-02-08 12:31 GMT
  • கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை.
  • வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்டு சதம் அடிக்க வேண்டும் என கங்குலி கூறினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

முன்னதாக கடந்த 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு செடேஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். இருப்பினும் 2020/21 தொடரில் பார்மை இழந்து தடுமாறிய அவர் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியது.

இந்நிலையில் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 வருடங்கள் கழித்து ஒரு வழியாக சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

அவர் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். அதன் வாயிலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 13வது இந்தியர் என்ற சாதனையும் படைப்பார். அதற்கு அவர் தகுதியானவர்.

ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.

ஏனெனில் கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை. எனவே அவருக்கு அப்படி ஒரு சதம் தற்போது தேவைப்படுகிறது. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

Tags:    

Similar News