கிரிக்கெட்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி

போராடி தோற்றதால் வருத்தமில்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி சொல்கிறார்

Published On 2022-06-24 06:01 GMT   |   Update On 2022-06-24 06:02 GMT
  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது.
  • ஒரு வீரர்களாக இப்போட்டியை அனுபவித்து விளையாடினோம்.

நெல்லை:

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று நெல்லையில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. சஞ்சய் யாதவ் 87 ரன் எடுத்தார்.

பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் இலக்கை நெருங்கியது.

கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட போது ஹரீஷ் குமார் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 64 ரன் எடுத்தார்.

ஆட்டம் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்தது.

10 ரன் இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய நெல்லை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5-வது பந்தில் இலக்கை எடுத்து வென்றது.

பரபரப்பான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

ஆட்டத்தில் ஏற்ற, தாழ்வு இருந்தது. ஒரு வீரர்களாக இப்போட்டியை அனுபவித்து விளையாடினோம். மொத்தத்தில் போராடி தோற்றதால் எந்த வருத்தமும் இல்லை.

ஒவ்வொரு போட்டி தொடரிலும் முதல் ஆட்டத்தில் தோற்பதை வெளிப்படையாக செய்ய விரும்புவதில்லை. இதை ஒரு நல்ல சகுனம் என அழைப்பதா என்று தெரியவில்லை.

இத்தொடர் வேகமாக செல்லும் என்பதில் உத்வேகத்தை பெறுவது முக்கியம். இதனால் அடுத்த போட்டிக்கு தயாராகும் வகையில் எங்களது திறமையில் மேலும் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்ய வேண்டும்.

நான் விளையாடிய விதத்தால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் நாங்கள் வெற்றி பெறாததால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீசின் பந்து வீச்சாளர் சித்தார்த் கூறும்போது, "நாங்கள் சிறப்பாக விளையாடினாலும் ஒருகடினமான தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனாலும் இதில் இருந்து சில பாடங்களைக் கற்றுக்கொண்டு அடுத்தப் போட்டியில் கண்டிப்பாக மீண்டெழுந்து வெற்றிக்கான பாதையில் பயணிப்போம்" என்றார்.

நெல்லை ராயல் கிங்ஸ் வீரர் அதிசயராஜ் டேவிட்சன் கூறும்போது, "போட்டியின் கடைசி ஓவர் மற்றும் சூப்பர் ஓவரை வீசி அணியின் வெற்றிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது சொந்த மக்கள் முன்பு வெற்றி பெற்றதும், விளையாடியதும் எனக்கு மகிழ்ச்சியளித்தது" என்றார்.

Tags:    

Similar News