கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- 7 விக்கெட்டில் வெற்றி

Published On 2023-08-20 05:18 GMT   |   Update On 2023-08-20 05:18 GMT
  • துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
  • இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

துபாய்:

டிம் சவுத்தி தலைமையி லான நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 19 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. மார்க் ஷேப்மேன் அதிகபட்சமாக 46 பந்தில் 63 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தார். அயன் அப்சல்கான் 3 விக்கெட்டும், முகமது ஜவாதுல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப்கான் 29 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

Tags:    

Similar News