சினிமா

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் - மன்மோகன் சிங் வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீடு

Published On 2018-12-28 07:01 GMT   |   Update On 2018-12-28 07:01 GMT
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நடந்தவற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. #TheAccidentalPrimeMinister #ManmohanSingh
சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பிரபலமானவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டிகள் நடக்கின்றன.

மன்மோகன் சிங், கடந்த 2004-ம் ஆண்டு பிரதமரான சூழ்நிலை குறித்தும் அவரது ஆட்சிக் காலம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் புத்தகம் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் வெளியான சமயத்தில் புத்தகத்தில் வந்தவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே என அப்போதைய பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என அந்தப் புத்தகத்தில் சஞ்சயா பாரு பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.



அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியிருக்கிறார். பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் நடித்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌‌ஷய் கண்ணா நடித்திருக்கிறார். இவர் பா.ஜனதா முன்னாள் எம்.பி வினோத் கண்ணாவின் மகன் ஆவார்.

2 நிமிடம் 43 விநாடிகள் ஓடும் படத்தின் டிரெய்லர், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகத்தில் இடம்பெற்றவை என்ற குறிப்போடு தொடங்குகிறது.

2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பின்னர், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டது, ரஷ்யாவுடனான அணுஆயுத ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரம் என அவரின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் பல்வேறு விவகாரங்கள் குறித்த காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்த படம், தற்போது 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. #TheAccidentalPrimeMinister #ManmohanSingh

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர்:

Tags:    

Similar News