சினிமா

சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்தப் படம் ‘சசிகலா’?

Published On 2016-12-16 12:58 IST   |   Update On 2016-12-16 12:58:00 IST
அரசியல்வாதிகளின் சர்ச்சைக்குரிய மறுபக்கத்தை திரைப்படங்களாக தயாரித்து கடும் விமர்சனக் கணைகளை எதிர்கொள்வதில் பேர்போன இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘சசிகலா’ என்ற தலைப்பை ஒருபடத்துகாக தேர்வு செய்து, பதிவும் செய்து வைத்துள்ளார்.
ஆந்திர மாநில அரசியல் களத்தில் நிலவிவரும் ரவுடியிசத்தை மையப்படுத்தி ‘ரத்தச் சரித்ரா’, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில போலீசாருக்கு சிம்மசொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியை விவரிக்கும் ‘கில்லிங் வீரப்பன்’ உள்பட சர்ச்சையை கிளப்புவதற்கென்றே படம் இயக்குவதில் பேர்போனவர் ராம்கோபால் வர்மா.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின்னர் இங்கு அ.தி.மு.க.வின் தலைமை பதவியை ஏற்கப்போவது யார்? என்பதை ஒட்டுமொத்த நாடும் உற்றுப்பார்க்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாலிவுட் திரையுலகமும் தமிழ்நாட்டு அரசியலில் நிகழவுள்ள திடீர் திருப்பங்களை கண்கொட்டாமல் கவனித்து வருவது தற்போது உறுதியாகியுள்ளது.

இதை தெளிவுப்படுத்தும் விதமாக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான ‘சசிகலா’ என்ற பெயரை தனது அடுத்தப் படத்துக்கான தலைப்பாக தேர்வு செய்து அதை பதிவும் செய்து வைத்துள்ளதாக நேற்று பின்னிரவு ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.



ராம்கோபால் வர்மா முன்னாள் முதல்வர் கையால் நந்தி விருதை பெறும் காட்சி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது உண்மையாகவே மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், அதற்கும் மேலான மரியாதையை அவரது தோழி சசிகலா மீது வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவே மற்றவர்களைவிட சசிகலா மீது அதிக மரியாதை வைத்திருந்ததால்தான் எனது படத்துக்கு ‘சசிகலா’ என்று பெயரிட தீர்மானித்தேன் என்றும் ராம்கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் இந்த அறிவிப்புக்கு டுவிட்டரில் சிலர், “சசிகலா’ படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் ‘சின்ன அம்மா’ என்று பெயர் வைத்தால் நிச்சயமாக வரிவிலக்கு உண்டு என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

Similar News