சினிமா

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

Published On 2016-12-09 17:54 IST   |   Update On 2016-12-09 17:54:00 IST
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவு மற்றும் பத்திரிக்கையாளர் சோ காலமானதையடுத்து இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒருங்கே பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது பிறந்தநாளை பண்டிகை போன்று அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இவரது 66-வது பிறந்தநாளைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ காலமானதையொட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பிறந்தநாளில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என்றும் போஸ்டர்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை காலமானார். பத்திரிகையாளர் சோ புதன்கிழமை மறைந்தார். இருவரின் உடல்களுக்கும் ரஜினி காந்த் இறுதி அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News