சினிமா

வைரமுத்துவின் உடல்நிலை பற்றி தவறான வதந்தி: கவிஞர் கபிலன் வைரமுத்து வேதனை

Published On 2016-12-07 11:20 IST   |   Update On 2016-12-07 11:27:00 IST
கவிஞர் வைரமுத்துவின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவரது மகன் கவிஞர் கபிலன், வதந்திகளை பரப்பும் ஊடகங்களை கண்டித்துள்ளார்.
சென்னை:

கவிஞர் வைரமுத்து ஆண்டுதோறும் ஒருமுறை வழக்கமாக செய்துகொள்ளும் வழக்கமான பரிசோதனைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிகையாளரும் நடிகருமான சோ ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து காலமானதௌ சுட்டிக்காட்டிய சில ஆன்லைன் ஊடகங்கள் கவிஞர் வைரமுத்து உடல் பரிசோதனைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்புப்படுத்தி விரும்பத்தகாத வகையில் தகவல்களை வெளியிட்டன.

அந்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவத் தொடங்கியதும், கவிஞர் வைரமுத்து விளக்கம் தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

’வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.

நான் முழு உடல் நலத்தோடுஇருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.

பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கு என் வணக்கம்’ என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தனது தந்தையை பற்றி பரவிய விரும்பத்தகாத வதந்திகளுக்கு அவரது மகனான கவிஞர் கபிலன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கபிலன், ’செய்தியை நிஜம் மாறாமல் ஒளிபரப்பும் நேர்மையான ஊடகங்களுக்கு மத்தியில் வதந்திகளை மட்டுமே ஒளிபரப்பும் சில ஊடகங்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

Similar News