சினிமா
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் முன்னோட்டம்.
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது: “இது, ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோச மான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ‘ஐ.டி.’ துறையில் வேலை செய்கிறான்.
கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? என்பதே கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்ததாக பத்ரி கூறினார்.