சினிமா
வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா நடிப்பில் உருவாகி இருக்கும் ’தொட்டு விடும் தூரம்’ படத்தின் முன்னோட்டம்.
‘தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக்கும் காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது. பின்னர் காதலியை தேடி அழகு சுரேஷ் சென்னை செல்கிறான். அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், காதலியை சந்தித்தாரா என்ற கேள்விக்கு விடையும் மீதி கதை. வித்தியாசமான காதல் படமாக தயாராகி உள்ளது. படத்தை பார்த்துவிட்டு வரும்போது அதன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது.