சினிமா
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படத்தின் முன்னோட்டம்.
ஹர்ஷினி மூவிஸ் சார்பில் எம்.ஹர்ஷினி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்'.
அரவிந்த் சாமி, அமலா பால் நாயகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.
இசை - அம்ரேஷ் கணேஷ், ஒளிப்பதிவு - விஜய் உலகநாதன், படத்தொகுப்பு - கே.ஆர்.கவுரிசங்கர், தயாரிப்பு - எம்.ஹர்ஷினி, தயாரிப்பு நிறுவனம் - ஹர்ஷினி மூவிஸ், எழுத்து, இயக்கம் - சித்திக்.
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் நடிகர் அரவிந்த்சாமி பேசும் போது,
" இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் சித்திக்கிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500-ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீசாக இருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.